டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
1289
வந்ததைக் கூடக் கவனியாமல் அவன் உள்ளம் அதில் ஊன்றியிருந்தது. அது மட்டுமன்று, அவன் கண்கள் கலங்கி இருந்தன.
அவன் தன்னிடம் ஏதும் வெளியிடாமல், இந்த வேளையில் ஒளித்துப் படிப்பது புனைகதையாகத்தான் இருக்க வேண்டும் என்று டாம் எண்ணினான். உடலும் உளமும் வளராத இந்தச் சிறுவயதில் கருத்தை முழுவதும் கவரும் நீண்ட புனைகதை வாசிப்பது உடல் உள வளர்ச்சியைக் கெடுக்கும் என்று அவன் அறிவுரை கூற எண்ணினான். ஆனால் புத்தகத்தைப் பார்த்தபோது அது புனைகதையன்று, திருநூலே என்று கண்டு அவன் திடுக்கிட்டான்.
வயதுசென்ற மனிதர்கள்கூட ஒப்புக்கும் மெய்ப்புக்கும் ஆரவாரப் பகட்டுக்கும் வாசிக்கும் திருநூலை
ச்சிறுவன் வ்வளவு கவனமாக ஒளிந்து வாசிப்பது அவனுக்குப் புரியவில்லை.அத்துடன் அவன் அதை வாசிக்கும்போது கண்ணீர் விடுவானேன் என்று அவனால் அறியக்கூடவில்லை.
ஆர்தருடன் மெல்ல இதுபற்றி நயமாகப் பேசி அவன் பல செய்திகளை அறிந்துகொண்டான். ஆர்தல் திருநூலின் புதிய ஏற்பாட்டைச் சமய பாடமாகப் படிக்கவும், ஓய்ந்த வேளையில் அதன் பழைய ஏற்பாட்டினை இன்பத்துக்காகப் படிக்கவும் பழகியிருந்தான். இது அவன் தாயின் திட்டம். தன் தாயும் திருநூலைப்படிக்கும்படி தன்னை வற்புறுத்தியிருந்தது டாமுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. தாயின் ஆணையை இதிலும் தான் முற்றிலும் மறந்தது நினைத்து அவன் வருந்தினான்.
அன்றுமுதல் இந்தச் சிறு ஓய்வு நேரமும் அவ்வப்போது ஆர்தருடன் கழிக்கப்படலாயிற்று. திருநூலைப் பற்றியமட்டில் ஆர்தர் அதன் ஒரு சிறு களஞ்சியம் என்பதை டாம் கண்டான். தான் வரும்போது அவன் கண்கலங்கி வாசித்தது ஜாபின் கதை! அதுபோன்ற பல கதைகளை அவன் ஆர்தரைக் கூறுவித்துக் கேட்டான். சிலசமயம் திருநூல் பகுதிகளை இருவரும் வாசிப்பர். அவ்வப்போது டாம் அவனுடன் உரையாடி நூலுரைகளுக்கு விளக்கங்களும் பெற்றான்.