பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

295

முக்கிய கட்டம் வந்ததும் அவன் திக்குதல் தேம்புதல் ஆகிறது. அவன் வாய்விட்டு அழத் தொடங்கினான். கண்கள் நீரைக் கொட்டுகின்றன.

"நயவஞ்சகக் கோழை! துரோகி! பசப்பி அழுது மழுப்புவதைப் பார்!" என்று கறுவினான் வில்லியம்ஸ்! வேறு பல பிள்ளைகளும் ஆர்தரை வெறுப்புடன் பார்த்தனர்.

வில்லியம்ஸ்தான் வென்றானோ என்ற நிலை ஏற்படுகிறது. ஆர்தர் திக்கும்போது ஆசிரியர் முகத்தில் ஆர்வம் குறைய வில்லை; கூடுகிறது. திக்குதல் பாடத்தைப் படியாததனாலன்று; அதை மனம் ஈடுபட்டுப் படிக்கும் உணர்ச்சியினால் என்பதைக் கவிதையார்வ மிக்க ஆசிரியர் கண்டு கொண்டார். ஒரு சிறுவனிடம் இத்தனை கலைப்பண்பு மிளிர்வது கண்டு அவர் எல்லையற்ற மகிழ்ச்சியும் இறும்பூதும் அடைந்தார். ஆகவே அவன் தேம்பியழும் கட்டத்தில் அவர்,"ஆர்தர், உன் ஒப்புவிப்பு முதல் தரமானது. நீ ஒன்றும் அவசரப்பட்டு ஒப்புவிக்க வேண்டியதில்லை. சற்று ஓய்வு எடுத்துக்கொள். பின் மேற்செல்லலாம்" என்றார்.

அவர் பரிவு உடனடியாகவே ஆர்தரைத் தேற்றிவிட்டது. அவன் குறிப்பிட்ட நாற்பது அடிவரை ஒப்புவித்துவிட்டுத் தயங்கினான்.

"ஆசிரியர் மேலே ஒப்புவிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார். நிறுத்திவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மாணவர்கள்," என்ற இரண்டக நிலையையே இத்தயக்கம் குறித்தது. 'அவன் ஏன் நிறுத்தி விடக்கூடாது. தயங்க வேண்டும்?' என்ற வினா பலர் உள்ளத்தில் எழுந்தது.

வினா வசைக்கணையாக வெளிவந்தது. வில்லியம்ஸுக்கு! “மடக்கழுதை! நன்றாய் மண்டையிலடித்து நொறுக்க வேண்டும்!" என்று அவன் சற்று உரத்துக் கூவினான்.

"டாம் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். “யாரைக் கூறினாய், வில்லியம்ஸ்?" என்றான்?"

“அந்த வெள்ளி மூஞ்சிப் பயலைத்தான்; ஆர்தரை!” என்றான் அவன்.