பக்கம்:அப்பாத்துரையம் 8.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை

297

ஆர்தரின் மதிப்பு அன்று சிறுவர்களிடையே உயர்ந்தது. தாம் ஏன் அவனைப் பின்பற்றியிருக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணினர்.

வில்லியம்ஸின் மதிப்புப் பிள்ளைகளிடம் என்றுமே அவ்வளவு தாழ்ந்ததில்லை. அவர்களின் திரும்பிய பார்வையே அவன் பக்கம் ஒத்துணர்வு குறைந்தது என்பதை உணர்த்திற்று. அவன் இத்தனை சீற்றத்தையும் உள்ளடக்கி வைத்துக்கொண்டு சமயம் வந்ததும் அதற்குத் தலைக் காரணமான அப்பாவி ஆர்தரிடம் அத்தனையையும் காட்டக் காத்திருந்தான்.

மணி ஐந்தடித்ததும் பிள்ளைகள் யாவரும் வெளியேறினர். தற்செயலாக அன்று டாம் தன் பாடக்குறிப்புகளை முடித்து வெளியேறச் சிறிதுநேரம் பிடித்தது. வெளியே வந்தபோது அவன் கண்ட காட்சி அவனைத் திணறடித்தது.பிள்ளைகள் அனைவரும் வெளி முற்றத்தில் கும்புகூடி வளைந்து நின்றனர். அவர்களிடையே புலியின் பிடியில் அகப்பட்ட புள்ளிமான் போல ஆர்தர் மருள மருள நின்றான். வில்லியம்ஸ் அவன் கழுத்துப்பட்டையைப் பிடித்து ஆட்டிக் கொண்டு கோர உருவில் நின்றான்.

டாம் கண்கள் சிவந்தன. அவன் உதடுகள் துடித்தன. அவன் சரேலென்று கூட்டத்தை விலக்கிச் சென்று ஆர்தரைத் தன்புறம் இழுத்துக் கொண்டு, “அவனைத் தொடாதே, வில்லியம்ஸ். விட்டுவிடு உடனே!" என்றான்.

“என்னை யார் தடுப்பது? நான் இந்தக் குரங்குக் குட்டியிடம் பழிவாங்கிவிட்டு மறுவேலைப் பார்ப்பேன். என்னை யார் தடுப்பது?” என்று வில்லியம்ஸ் சீறினான்.

"நான், இதோ பார்!" என்று உரத்துக் கூவிய வண்ணம் அவன் ஆர்தரைப் பிடித்திருந்த கை கீழே விழும்படியாக அதன்மீது ஓங்கி ஓர் அறை அறைந்தான் டாம்.

வில்லியம்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. சற்றுப்பின் வாங்கியபின் சமாளித்துக்கொண்டு “என்னுடன் மல்லுக்காடா வருகிறாய்?" என்றான்.

'ஆம்' என்று இறுமாப்புடன் விடையளித்தான். டாம்.