டாம் பிரௌணின் பள்ளி வாழ்க்கை
307
ஆர்தர் கேட்டபோது, "இல்லை, என் நெஞ்சிலிருந்து உன் நெஞ்சுக்கு யாராவது எப்போதாவது நம்மையறியாமல் குழாய் வைத்திருப்பார்களோ என்று நினைத்தேன். சிரிப்பு வந்து விட்டது” என்றான்.
ஆர்தர் அப்போதும் அவன் குறிப்பு விளங்காமால் விழித்தான்.
டாம் மேலும் சிரித்து "அப்படிக் குழாய் இல்லாவிட்டால், நான் காயம்பட்டபோது, நோவு என்னிடம் இராமல் உன்னிடம் எப்படி வந்திருக்கும்?" என்றான்.
ஆர்தர் இது கேட்டுத் தன் கவலையை மறந்து புன் முறுவல் பூத்தான்.
டாம் மேலும் அறிவுரையாகச் சில கூறினான். “என் கடமையை நான் உனக்குச் செய்தேன். ஆனால் நீ உன் கடமையைச் சரிவர ஆற்ற இன்னும் படிக்கவில்லை. நான் செய்ததற்கு நன்றி இப்படி முகத்தை வைத்துக் கொண்டிருப்பதுதானா! நீ மகிழ்ச்சியாயிருப்பதற்காகவல்லவா நான் இவ்வளவு பாடுபடு கிறேன்” என்றான்.
ஆர்தர் உடனே மன்னிப்புக் கோரி “இனி மகிழ்ச்சியா யிருப்பேன். உன் தியாகத்துக்கு நான் தகுதியுடையவன் என்று காட்டுவேன்” என்றான்.
சிறிது நேரம் சென்று ஆர்தர் “எனக்காக நீ இந்த சண்டையில் மாட்டிக்கொண்டு இத்தனை காயம்பட்டாய். அதை நான் மறக்க மாட்டேன்" என்றான்.
"முற்றிலும் உனக்காக என்று நீ நினைத்துப் பெருமை கொள்ளாதே. உன் சாக்கில் இல்லாவிட்டால் வேறு சாக்கில் அவன் கட்டாயம் ஒருநாள் எதிர்த்தே இருப்பான்."
"சரி, எப்படியானாலும் இனி அவனுடன் பகைமை கொண்டு எதிர்க்கவேண்டாமென்றாவது நான் கேட்டுக் கொள்கிறேன்."
"அஃதெப்படி முடியும்? அவன் போராட்டம் தொடங்கினால், நான் எப்படிக் கோழையாயிருக்க முடியும்?”