12
அப்பாத்துரையம் – 8
வாழ்க்கையை முற்றிலும் ஒப்படைத்தார். அவர் துணைவியாரின் உடலழகை மதித்தவராக மட்டுமிராமல், அவர் அறிவையும் திறனையும் மதித்து, அவரை ஒரு தோழராகக் கொண்டார்.
கடவுள் என்ற சொல்லைப்போல, காதல் என்ற சொல்லை யும் அவர் வழங்க மறுத்தார் என்பது உண்மையே. இரண்டு சொல்லும் போலிப்பண்பாளரால் மதிப்பிழந்து போயிருந்தன. கடவுள் என்ற சொல்லின் உண்மையான கருத்தை உயிராற்றல் என்ற புதுச்சொல் மூலம் அவர் விளக்கினார். அதுபோலவே வாழ்க்கையின் மறைஆற்றல்* என்று அவர் உண்மைக் காதலுணர்ச் சியைக் குறிக்கிறார்.
காதலில்லாப் புனைகதைகள், நாடகங்கள் எழுத நாட்டங் கொண்டவர் அரியர்; நாட்டங்கொண்டு வெற்றி பெற்றவர்கள் அதனினும் அரியர். ஷா இங்ஙனம் வெற்றி பெற்றவருள் தலை சிறந்தவர். அவர் இயற்றிய காதலில்லா நாடகங்களும், காத லுணர்ச்சியை எதிர்த்த நாடகங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல; பல. ஆயினும் அவை வாசிப்பவர்களுக்குச் சலிப்புத் தருவதில்லை என்று கட்டாயமாகக் கூறலாம். இவற்றுள் பல, ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் போலவே சிறப்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கன.
எதையும் எதிர்ப்பவர், எதையும் மறுப்பவர், எதையும் நையாண்டி செய்பவர் என்ற பெயர் ஷாவுக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. உண்மையில் இவ் வெண்ணத்தை வலியுறுத்தி, மக்களி டையே பரப்பியவர் அவரே என்னலாம். எக்கொள்கையிலும் சார்பாளர், மறப்போர் ஆகிய இருதிறத்தினரிடமிருந்தும் தம்மைப் பிரித்து, தம் தனித் தன்மையையும், விருப்பு வெறுப்பற்ற அறிவுச் சார்பான நடுநிலையையும் வற்புறுத்தவே அவர் இம் முறையைக் கையாண்டார். இது வெற்றிபெறவே, அவர் இதனை ஒரு புதுக் கலையாக்கிவிட்டார். முனைப்பான இறுமாப்பு நடையும் மனித இனத்தையே எள்ளி நகையாடுவதுபோன்ற பெருநகையும் அவர் தாமே விரும்பி மேற்கொண்ட இத்தகைய பண்புகளே. இவை உண்மையில் இறுமாப்பல்ல; பகை, தன்னல உணர்ச்சிகள் சார்ந்தவையுமல்ல. அவர் புறத்தோடாகிய அரணைத் துளைத்து, அவர் நட்புரிமை பெற்ற ஒருசிலர் இதனைக்