5. நாடகமேடைப் போராட்டம்
கலைகளுள் சிறந்தவை அழகுணர்ச்சியும் இன்ப நுகர்வும் தரும் கவின்கலைகள். ஓவிய முதலாகக் காவியமீறாகக் கவின் கலைகள் பல. இவற்றுள் வடிவோவியம், வண்ண ஓவியம், உருவோவியம் முதலிய யாவும் கட்புல நுகர்வுடையன. மேலும் அவை நிலையான உணர்ச்சிகளைத் தூண்டுமேயன்றி உணர்ச்சி யியக்கம் குறிக்காது. இசை செவிப் புலனுகர்வுடையது; அத்துடன் உணர்ச்சியை இயங்கச் செய்யவல்லது. காவியமோ ஐம்புலனு கர்வும், உணர்ச்சியியக்கமும் அறிவுப் பயனும் உடையது.காவியங் களுட் சிறந்தது நாடகம். இது மேற்கூறிய எல்லாப் பண்புகளுடன் செயற்பண்பும் கூட்டி, எல்லாக் கலைகளின் முழு நிறைவாய் அமைந்துள்ளது. நாடக ஆசிரியர் பலர் இம்முழு வாழ்க்கைப் பண்பின் தனித்தனிக் கூறுகளையே தீட்டமுடிந்தது. இளங்கோ, காளிதாசன், ஷேக்ஸ்பியர் ஆகியவர்கள் அதன் முழு அகல நீள உயரங்களையும், திட்பங்களையும் ஒருங்கே தீட்டினர். அணிமைக்காலங்களில் அதன் முழுப்பரப்பையும் தாவி அளந்து, அத்துடன் தற்கால நாகரிகப் பண்பாகிய அறிவுப் பண்பையும் இணைத்த கலைஞர் பெர்னார்டுஷா ஒருவரே. இவ்வகையில் நிறைகலைஞராகிய ஷேக்ஸ்பியரிடமோ வேறு எக்கலைஞ ரிடமோகூடக் காண முடியாத தனிச்சிறப்பு ஷாவுக்கு உண்டு. அதுவே இவ்வறிவுப் பண்பும் அதன் நிறைவாய் நாட கத்தின் பின்னணியாக அவர் அமைத்த வாழ்க்கைக் கோட்பாடும் ஆகும்.
ஒன்றிரண்டு சிறந்த நாடகங்களால்கூட உலகச் சிறப்புற்றவர் உண்டு. உண்மையில் உலக நாடகாசிரியருட் பெரும்பாலார் இத்தகையவரே. பல தலைசிறந்த நாடகங்கள் உட்பட, 20 ஆண்டுக்காலம் நீடித்த தம் இலக்கிய வாழ்விடையே, 33 நாடகங் கள்வரை எழுதிக் குவித்தவர் ஷேக்ஸ்பியர். ஷா இதே வகையில், ஆனால் இலக்கிய வாழ்வுக்கால அளவிலும், நாடகங்களின்