அறிவுலக மேதை பெர்னாட்சா
77
மேலாளான ரிச்சர்டு கிரைன் வெளிநாட்டுப் புதுமை நாடகங்களையே நடத்தும் மரபை வெறுத்தார். ஆங்கிலேயரால் இயற்றப்பட்ட நாடகங்கள் வேண்டுமென அவர் அவாக்கொண் டார். அத்தகைய நாடகமொன்று இயற்றித் தரும்படி 1892-ல் ஷாவை அவர் கோரினார்.
ஷாவுக்கு இப்போது ஏழாண்டுகளுக்கு முன் தாம் எழுதிக் குப்பைக்கூடையில் எறிந்த நாடகம் நினைவுக்கு வந்தது. காலத்துக்கு ஏற்றதன்று என்று அவர் அன்று கருதிய நாடகம், இப்போது ஏற்புடையதாகக் கூடியதே என்று அவர் துணிந்து, அதனை முற்றுவித்துக் கொடுத்தார். அதுவே, "மனையிலார் மனைகள்” என்ற அவர் முதல் நாடகம்.
ஏழாண்டுகள் கருவிலிருந்து பிறந்த இப்புரட்சிக் குழவிக்குப் புரட்சிகரமான வரவேற்பே கிடைத்தது. இதில் வியப்புக்கிட மில்லை. இதன் பெயர் பழுத்த விவிலிய நூற் பண்புத்தொடர்பு உடையதே. ஆனால் அதன் போக்கு செல்வர் ஆட்சியையும், அவர்கள் அறநிலையங்களின் மதிப்பாட்சியையும் தாக்கிப் புண்படுத்துவதாயிருந்தது. மனையிலாப் பஞ்சை ஏழையருக்குச் செல்வர் குச்ச வீடுகளை வரிசை வரிசையாய்க் கட்டிக்கொடுத் தனர். அவற்றின் குடிக்கூலி அளவிற் சிறிதாயினும், குடியிருக்கும் வீடமைதி நோக்க, மட்டுமீறியதாகவே அமைந்தது. அத்தொழிலி லீடுபட்டவர் சிறுமுதலீட்டில் பெருவருவாய் பெருக்கும் முதல் தர முதலாளிகளாயினர். செல்வத்தின் ஆற்றலால் அவர்கள் அரசியலாட்சியைக் கைக்கொண்டது மட்டுமின்றி, அறநிலை யங்களை இயக்கி மதிப்பாட்சியும் பெற்றனர். இம்முறையில் உயர்வு பெற்றுவந்த ஒரு செல்வன், இப் புதுவாழ்வுக்குத் ப் தகுதியுடையவளாகத் தன் புதல்வியைப் பயிற்றுவிக்கிறான். அவள்மூலம் ஓர் உயர்குடிப்பண்பாளனான இளைஞனைக் கவர்ச்சியூட்டி, தன் செல்வத்துடன் அவ்வுயர்குடிப்பண்பை இணைத்துவிட முயல்கிறான். எத்தகைய பொய்ம்மை, போலி நடிப்பு, கீழ்நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தூய உயர் குடிப் பண்பாண்மை நிலைபெறுகிறது என்பதை நாடகப் போக்குக் குத்தலாக எடுத்துக் காட்டுகிறது.
இந்நாடகம் மேடையிலும் பேரமளியை உண்டுபண்ணிற்று. கலைக் கருத்துரையாளராலும் வன்மையாகத் தாக்கப்பட்டது.