பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அப்பாத்துரையம் - 9

அவரது அறிவுரை தொடக்கத்தில் என் உணர்வில் புகவில்லை. ஏனென்றால், அப்பெண்களை அவ்வளவு மோசமாக நான் கருதவில்லை. ஆனால், மாது எனக்குப் பலகுறிப்புக்கள் தந்தார். நான் கண்டும் கேட்டும் கவனமில்லாது விட்டுவிட்ட பல சிறு செய்திகளை அவர் என் ஆராய்வுணர்வுக்குக் கொண்டுவந்து காட்டினார். இறுதியில் அவர் கூறியது முற்றிலும் சரியே என்று நான் கண்டேன், அவர் அன்பு கனிந்த அறிவுரைக்கு நான் நன்றி தெரிவித்து, அதன்படி நடப்பதாக உறுதி கூறினேன்.

நாங்கள் நியூயார்க்குக்கு வந்து சேர்ந்தபோது, அப்பெண்கள் என்னிடம் வந்து தாங்கள் தங்கும் இட விவரத்தை என்னிடம் சொல்லி, அங்கே வந்து தங்களைக் காணும்படி அழைத்தார்கள். ஆனால், நான் அவர்களை அணுகிப் பேசாது மெல்ல நழுவி விட்டேன். நான் அப்படிச் செய்ததே நல்லதாகப் போயிற்று. ஏனெனில்,மறுநாள் மீகாமன் அறையிலிருந்த வெள்ளிக்கரண்டியும் வேறு சில பொருள்களும் காணாமற்போயின. காவலர் தேட்டுரி மைத்தாளுடன் (Search Warrant) வந்து தேடிய போது, அவர் களுடைய அறையில் அவை காணப்பட்டன. உரிய இடத்தி லேயே அவர்களுக்குத் தக்க தண்டனையும் தரப்பட்டது. மூழ்கிக் கிடந்த பாறையின் மீது கப்பல் மோதியதால் உண்டான இடரி லிருந்து தப்பியதைக் காட்டிலும் இந்த இடரிலிருந்து தப்பிப் பிழைத்ததே என் வாழ்க்கையில் பெரிது என்று நான் கருதினேன்.

52. காலின்ஸின் பெருமையும் அதைக் கெடுத்த சிறுமையும்

நியூயார்க்கில் நான் என் நண்பர் காலின்ஸைச் சந்தித்தேன். அவர் எனக்கு முன்பே அங்கே வந்து சேர்ந்திருந்தார்.

நாங்கள் இருவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே நன்கு பழகியிருந்தோம். இருவரும் ஒன்றாகவே பல புத்தகங்களைப் படித்திருந்தோம். ஆனால் வாசிப்பதற்கும் கல்வியறிவை வளர்ப் பதற்கும் என்னைவிட அவருக்கு நேரமும் வாய்ப்பும் மிகுதி. அத்துடன் கணக்கியல் துறையில் அவருக்கு என்னைக் காட்டிலும் மேம்பட்ட சுவைத் திறம் இருந்ததனால், அதில் அவர் என்னைப் பெரிதும் விஞ்சியவராயிருந்தார்.