102
அப்பாத்துரையம் - 9
மாற்ற நான் எவ்வளவோ முயன்றேன். ஆனால், பாடல்களை எழுதிக் குவிக்கும் பழக்கத்தை அவர் நெடுநாள் விடவில்லை. ஆயினும் அவர் உற்றிருந்த நோயைப் போப்26 குணப்படுத்தி விட்டார். அத்துடன் அவருடைய கவிதை முயற்சியும் முற்றிலும் வீண்போகவில்லை. அவர் ஒரு சிறந்த உரை நடை எழுத்தாளராக மிளிரத் தொடங்கினார். இதைப் பற்றி மேலே கூற இருக்கிறேன். ஆனால் மற்ற இருவரைப் பற்றியும் மேலே கூற வாய்ப்பு ஏற்படாது என்ற காரணத்தால், அவர்களைப் பற்றிய செய்திகளை இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.
எங்கள் கூட்டுக் குழுவில் மிகச் சிறந்தவராகிய வாட்ஸன் சில ஆண்டுகளுக்குள்ளாகவே, எங்கள் அனைவரையும் ஆரா வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு, இவ் உலக வாழ்வை நீத்தார். என் தோள்கள் மீது சாய்ந்த வண்ணமே அவர் இறுதி மூச்சு வாங்கினார்.
ஆஸ்போர்ன் மேலை இந்தியத் தீவுகளுக்குச் சென்று, புகழ் பெற்ற வழக்குரைஞர் ஆனார். அத்துறையில் அவர் பெரும் பொருளும் ஈட்டினார். ஆனால், அவர் வாழ்வு இளமையிலேயே முடிவுற்றது.
65. நிறைவேறா மாய ஒப்பந்தம்!
வாழ்வும் இறப்பும் பற்றிய ஒரு புதுமையான ஒப்பந்தத்தை நாங்கள் இதற்கு முன்பே செய்திருந்தோம். எங்கள் இருவரில் யார் முதலில் இறக்க நேர்ந்தாலும், ஆவி வடிவிலேயே மற்றவரை வந்து பார்வையிட வேண்டும் என்றும், இறப்புக்குப் பின்னுள்ள அந்த மறைநிலையில் தாம் கண்ட கண்கூட கண்கூடான செய்திகளை இவ்வுலகத்தில் வாழும் தம் நண்பருக்கு அறிவித்துச் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் ஒத்துக் கொண்டிருந்தோம்.ஆயினும், அவர் உயிருடன் இருக்கும் போது செய்த இந்த வாக்குறுதியை இறந்த பின் நிறைவேற்றவேயில்லை!
66. மீண்டும் ஆட்சியாளர் பசப்பு
ஆட்சியாளர் என் கூட்டுறவை மிகுதி விரும்பிய காரணத்தால், என்னை அடிக்கடி தம் இல்லத்துக்கு அழைத்து உரையாடி வந்தார். என் தொழில் திட்டம் ஒரு முடிந்த முடிவாகவே