பக்கம்:அப்பாத்துரையம் 9.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெஞ்சமின் பிராங்ளின்

35

தினரின் பிறப்பு, திருமணம், இறுதியடக்கம், முதலியவை பற்றிய பதிவேடுகள் காணப்பட்டன. அதற்குமுன் அவ்வூரிலேயே பதிவேடுகள் வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்தப் பதிவேடுகளின் மூலம், ஐந்து தலைமுறைகளாகக் கடைசிப் புதல்வனின் கடைப் புதல்வனாகவே என் மரபு தொடர்ந்து வந்திருப்பதைக் கண்டேன்.

என் பாட்டனார் தாமஸ் 1598-இல் பிறந்தவர். மேலும் வேலை செய்ய முடியாத பழுத்த முது வயதுவரை அவர் எக்டனிலேயே வாழ்ந்தார். அதன்பின் ஆக்ஸ்பர்டுஷயரி லுள்ள (Oxfordshire) பான்பாரி (Banbury) என்னும் ஊரில் சாயத் தொழிலாளராயிருந்த அவருடைய புதல்வர் ஜானுடன் அவர் சென்று தங்கினார். இந்த ஜானிடத்திலேயே என் தந்தையும் பயில் தொழிலாள (Apprentice)ராக இருந்தார். என் பாட்டனார் இறந்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் இங்கேதான். 1758-இல் நான் அங்கே அவருடைய கல்லறைப் பட்டயத்தைக் கண்டேன்.

என் பாட்டனாரின் மூத்த புதல்வர் தாமஸ் எக்டனில் குடும்ப இல்லத்திலேயே வாழ்ந்தார். அவருக்கு ஒரு புதல்வி மட்டுமே இருந்ததால், அவர் தம் மனையையும் நிலத்தையும் அப்புதல்விக்கே விட்டுச் சென்றார். புதல்வியார் வெல்லிங் பரோ (Wellingborough)வைச் சார்ந்த பிஷர் (Fisher) என்பவரை மணந்து கொண்டார். அவர்களது நாளிலேயே மனையும் நிலமும் திரு. இஸ்டெட் (Isted) என்பவருக்கு விற்கப்பட்டதனால், அவை இன்று அவரை உடையவராகக்கொண்டு திகழ்கின்றன.

என் பாட்டனாரின் புதல்வர்களுள் நல்ல வயதுவரை வாழ்ந்திருந்தவர்கள் நால்வர். அவர்கள் தாமஸ் (Thomas) ஜான் (John) பெஞ்சமின், (Benjamin)ஜோசையா, (Josiah) என்பவர்கள். அவர்களைப்பற்றி எனக்குக் கிடைத்த தகவல்கள் அடங்கிய ஏடும் இப்போது கைவசம் இல்லாமல் இருக்கும் நிலையில், எனக்கு நினைவுக்கு வந்தவரை அவர்களைப் பற்றிக் கூறுகிறேன். அந்த ஏடு தொலையாமலிருந்தால், இன்னும் மிகுதியான விவரங்களை நீ அவற்றில் காணலாம்.

3. மறுபிறப்பா?

தாமஸ் தம் தந்தையினிடம் கொல்லனாகப் பயிற்சி பெற்றிருந்தார். ஆனால், என் உடன் பிறந்தார்களைப் போல,