பக்கம்:அமுதவல்லி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 101


 பொன்னரசி ஊர் பேர் அறியாத அந்த ஸ்திரீ மீது ஆத்திரப்பட்டாள். தொட்டு எழுப்பினாள்; தட்டிக் கூப்பிட்டாள். ஊஹூம் அவள் ஏன் அக்கறை கொள்ளப் போகிறாள்?
 பொன்னரசி குனிந்து தன்னைத் தானே ஒரு முறை நோக்கிக் கொண்டாள். நெஞ்சகம் விம்மித் தணிந்தது. ஆனால் விழிப்புனல் மட்டுமே வடிந்தது! ‘ம்......என்னாலே என்ன செய்ய முடியும்?”
  கைந் நொடிப் பொழுது கழன்று வீழ்ந்தது.
 ஆதுரம் துள்ள பொன்னரசி குழந்தையை அணுகினாள்; குனிந்து அதை வாரியெடுத்து அணைத்துக் கொள்ள முனைந்த நேரத்தில், இருதயத்தில் இடியொன்று வீழக்கண்டாள்: இடியோசை காதுகளைச் செவிடுபடச் செய்தது. அணைக்கத் துடித்த நெஞ்சு நஞ்சம் உண்டாற் போலப் பதைத்துப்பின் தங்கிற்று. 

“ஆ... ஐயோ!" என்று கூக்குரல் பரப்பினாள் பொன்னரசி. உதிரம் கொட்டியது, கண் முனைகள் இரண்டிலுமிருந்து. அடிவயிற்றில் அவளது மெலிந்த விரல்கள் இழைந்தன. மறுகணம் அவை சூடுபட்டுச் சூம்பின. அமிர்தம் பிறக்கும் பகுதிகளில் தீஅழல் எரிந்தது. நெற்றிப் பொட்டுத் தெறித்தது. ஐயையோ!' என்று கூப்பாடு போட்டவாறு பொன்னரசி மண்ணில் சாய்ந்தாள். அடி துண்டு பட்ட முருங்கையைப் போன்று.

 அப்போது, 'ஆத்தா ஆத்தா!’ என்ற அழைப்புக் கேட்கத் தொடங்கியது.
 அவள் விழிகளை விலக்கினாள் ஒருகால் 'ஆத்தா’ என்ற சொற்கள் அவளுடைய உந்திக் கமலத்தைத் தொட்டனவோ? அவள் திகைப்படைந்தாள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/103&oldid=1376357" இலிருந்து மீள்விக்கப்பட்டது