பக்கம்:அமுதவல்லி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. காதல் பொல்லாதது!

டெலிபோன் அழைத்தது. "ஹெல்லோ! யார் பேசறது?

ஓ, வாணியா?.... ஆமாம், நான் தான்... உன் அத்தான் தான் பேசறேன். இதோ, வீட்டுக்குத் தான் புறப்பட்டுக் கிட்டிருக்கேன்!... நீ இப்போதே டிரஸ் பண்ணிக்க ஆரம்பிச்சிடு, அப்பத்தான் நான் வந்து சேர்றதுக்கும் நீ புறப்பட்றதுக்கும் சரியாகவிருக்கும்! அடடே, கோபம் வந்துவிட்டதா? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், வாணி! என்ன ஷீபான் சில்க் தானே? பேஷ்! ஆர்கண்டி சோளியா? ரொம்பப் பொருத்தம்; ரொம்பப் பொருத்தம்! மினர்வாவுக்கு...! படத்தின் பெயரை மறந்திடாதே! ஒரு பெண் இரட்டை வேஷத்தில் இருவேறு குணச்சித்திரப் பாத்திரமாக நடிக்கிறாளாம். நண்பர்கள் சொன்னார்கள். இதோ, இன்னும் அரை மணியில் நான் வாணி விலாசத்தில் இருப்பேன். ஆமாம், வாணி! நீ தானே நான்! நான் தானே நீ? ஓ. கே!’

ரிஸீவர் தன் இடத்தில் மோனத் தவம் இருந்தது. எழுந்த மணி ஓசையின் மெல்லிய அலையில் வாணி சற்று முன் சிரித்த சிரிப்பு மிதந்தது; எதிரொலித்தது சிரிப்பில் வாணி உருவெடுத்தாள். பெண்கள் பாக்கியசாலிகள். சிரிக்கத் தெரிகிறது; சிரிக்க முடிகிறது. அவர்கள் இல்லையென்றால், உலகத்திலே சிரிப்பே தோன்றியிராதோ.. ? இல்லை. உலகமே தான் தோன்றியிருக்காதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/178&oldid=1378321" இலிருந்து மீள்விக்கப்பட்டது