பக்கம்:அமுதவல்லி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ் ஆறுமுகம்

229


 கெட்ட கனா கண்டவன் நிலையில் காளியப்பன் தட்டுத் தடுமாறி எழுந்தான். கிறக்கமும் அசதியும் அவன் உடலை முறித்துப் போட்டன. சோம்பல் முறித்து, நெட்டி பறித்து முடிந்ததும், இருட்டில் கண்களைத் துழாவிய வண்ணம் அவசரமாகக் கைகளைப் பக்கத்தில் நீட்டித் தடவினான். மறுகணம், நட்டு வக்காளி, கொட்டினாற் போன்று அவன் உயிர்க் கழுவில் துடித்தான். கபாலம் சூடேறியது. வேர்வைக்கொட்டிது. எம்புட்டுச் செம்பவளம் எங்கிட்டுப் போச்சு?” மண்டை வெடிக்கு முன்னே நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. பதட்டம் சேர்த்து, விளக்கில் ஒளியைச் சேர்த்தான்.

செம்பவளத்தைக் காணவில்லை!

உள் மனம் அவளை அழைக்க, உள் ஒலம் அவனை விளிக்க, நிலவுக்கும் நினைவுக்குமாகப் பாய்ச்சல் மடை கட்டியவாறு காளியப்பன் பறந்து ஓடினான்; ஓடிப் பறந்தான்.

சாமக்குருவி வீரிட்டது!

சாலை வந்தது.

சாலை மரத்தின் உச்சாணிக் கொம்பிலிருந்து: சாமக்குருவியின் பயம் செறிந்த கதறல் நழுவிக் கொண்டிருந்தது. .

தலையை நிமிர்த்தினான் அவன்.

சாலை மரத்தில் அவனுக்கென ஒரு காட்சி காத்துத் தவம் இருந்தது.

“ஐயையோ...எந் தெய்வமே!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/231&oldid=1378452" இலிருந்து மீள்விக்கப்பட்டது