பக்கம்:அமுதவல்லி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 - அமுத வல்லி

தின் மீது அவள் திரும்பத் திரும்பப் பார்வை செலுத்தினாள். தன்னை மறந்த துடிப்பில்-துடிப்பில் லயித்த சலனத் தவிப்பில்-தவிப்பில் நிலை புரண்ட மனப்போராட்டத்தில் சிக்கிக் கிடந்த அவள், தீர்வு கண்டு தெளிவு பெற்றவள் போல விழி கூட்டி வழி பார்த்து வழி நடந்தாள். கீழ்ப் படிக்கட்டுக்கு வந்ததும், “மச்சான்!” என்று அழைத்தாள். இதயம் என்னும் தத்துவத்தின் உட்பொருளை உணர்ந்து கொண்ட பரிபக்குவ நிலையில் நின்று அவள் கூப்பிட்டாள். வண்டு விழிகள் அழகாகத் துடித்தன, அழகாக நீர் சொரிந்தன.

மாரியப்பன் உணர்ச்சி வசப்பட்டவனாக நின்று கொண்டிருந்தான். அவனுடைய கைகள் புழுதி படிந்து, ரத்தக்கறை தோய்ந்திருந்தன. அவற்றை உரிமை கொண்டு பற்றினாள் அவள், “உங்களை நான் மறந்திருந்தேன். ஆனால், என்னை நீங்கள் மறக்காமல், ஆபத்துக்கு உதவினிர்கள். நான் பிழைத்தேன்: என் மானமும் பிழைத்தது!” என்றாள்.

துயரம் கவிழ்ந்த முகத்தில் சிரிப்பின் சன்ன இழைகள் அந்தம் கெடாமல் பின்னிக் கிடந்தன.

அமுதவல்லியின் அன்னை அப்போது அங்கே வந்தாள். வந்த அவள் மாரியப்பனைக் கண்டவுடன், “யாரு, எங்க மாப்புள்ளைத் தம்பியா?” என்று வியப்புக்குரலில் கேட்டாள்.

“ஆமாம்மா, நீ உள்ளே போய் இரு. நானும் மச்சானும் இதோ வருகிறோம்!”

கிழவி தத்தித்தத்தி நடந்து உள்ளே மறைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/34&oldid=1230679" இலிருந்து மீள்விக்கப்பட்டது