பக்கம்:அமுதவல்லி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 33

அமுதவல்லி சொன்னாள்: “மிஸ்டர் இந்திரஜித், நீங்கள் இனிமேல் புறப்படலாமல்லவா? என்னுடைய வெள்ளை உள்ளத்தை ஏமாற்றத் திட்டம் போட்டீர்கள். நான் அறியாமற் போயிருந்தாலும், தெய்வம் அறியாமலிருக்குமா? என் அத்தானின் உருவைக் கொண்டு ஆண்டவன் தோன்றி என்னைக்காத்தான். சிறைக் கம்பிகளுக்கு உள்ளே வெந்து மடிந்திட வேண்டிய உங்களையும் காத்தான். வாழ்வின் தர்மம் பெரிது. இதை மறந்து விடாமல், சென்று வாருங்கள். ஒரு அமுதவல்லி உங்களுக்குச் சோதனைப் பொருளாக மாறியது போதுமல்லவா? இந்தத் திரைஉலகம் மாயாலோகம் என்று பாமரர்கள் சொல்வது வழக்கம் அதை நீங்கள் மெய்ப்பித்து விட்டீர்களே? உங்களை நான் ஆயுள் உள்ளமட்டும் எப்படி மறப்பேன்?”

ஆத்திரமும் அழுகையும் கட்சி கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின.

பேயறை பெற்று விட்டானோ திரையுலகக் கதாநாயகன் இந்திரஜித்?

ஜமீன்தார் மாதிரி விளங்கினான் மாரியப்பன். வயிறுபுடைக்கத் தின்று விட வேண்டுமென்றுதான் கருதியிருந்தான். ஆனால், மனத்தில் இட்டு நிரப்பப் பெற்ற அமைதியும் சந்தோஷமும் பசிக்களைப்பையும், மன அயர்வையும் காற்றிலடித்து விட்டன: அவ்வுணர்வே, வயிற்றை நிரப்பியது போலவும் அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும்!

“ஆமாம், அமுதா! நான் சொன்னது அத்தனையும் அப்பட்டமான உண்மையேதான். பிழைப்புக்கு வேஷம் போடப் பார்த்தார்கள். எப்படியோ ஒரு கண்டம் தப்பித்தது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/35&oldid=1230680" இலிருந்து மீள்விக்கப்பட்டது