பக்கம்:அமுதும் தேனும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த உழவனும்

அணைக்குடி வள்ளலும்


அந்திநிலா உறங்கவில்லை; புதிய வெள்ளம்
அள்ளிவரும் காவிரியும் உறங்க வில்லை;
செந்தமிழ்நூல் ஆய்வோரும் உறங்க வில்லை;
திருடர்களும் காதலரும் உறங்க வில்லை;
வந்தவர்க்கு விருந்திட்டும், பின்னர் யாரும்
வரக்கூடும் என்றுலையில் அரிசி யிட்டும்.
உந்தியெழும் நல்லுணர்வை முகத்தில் காட்டி
உபசரித்து வருவோரும் உறங்க வில்லை.


மணங்கொடுத்து மதுகொடுக்கும் அல்லிப் பூக்கள்
வான்மதியை வரவேற்கும் இரவில். வெள்ளிப்
பணங்கொடுக்கும் காமுகர்க்குப் பவளச் செவ்வாய்ப்
பழங்கொடுக்கும் பரத்தையரும் உறங்க வில்லை.
வணங்குகின்ற நெற்கதிரும் கரும்பும் சேர்ந்து
வளர்ந்துவரும் சோணாட்டில் அமைந்த ஊராம்
அணைக்குடியில், வாழ்ந்தவள்ளல் சட்ட நாதன்
அவனுமன்று நெடுநேரம் உறங்க வில்லை.