பக்கம்:அமுதும் தேனும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விதவையும் வேதாந்தியும்



நாடுபுகழ் விஜயரங்க சொக்க நாத
நாயக்கன் அரசாண்டு வந்த நாளில்
வாடவில்லை மக்கள்முகம், மன்னன் செங்கோல்
வளையவில்லை; ஆதலினால் அன்னோன் ஆட்சி
ஆடவில்லை; சிறிதேனும் அசைய வில்லை;
அம்மன்னன் நோயுற்று மாண்ட பின்னர்,
மாடமெல்லாம் விளக்கெரியும் நாட்டை, அன்னோன்
மனையாட்டி மீனாட்சி ஆண்டு வந்தாள்.

பருவத்தை இழக்காமல் தங்கத் தாலி
பாக்கியத்தை இழந்தவளாம் அந்த மங்கை,
இருபத்து நான்குவய துடையாள்; இல்லை
இல்லையெனும் இடையுடையாள்; கரிகாற் சோழன்
கரையிட்ட பொன்னிநதி மீன்கள் மெச்சும்
கண்ணுடையாள். ஆசைக்குப் பூசை செய்யும்
பருவத்தாள்; உருக்கியநெய் நிறத்தாள்; காமப்
பசியுடையாள்; பனிபெய்த வயலைப் போன்றாள்.