பக்கம்:அமுதும் தேனும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

72


மூக்கின்மேல் அழகான மச்ச முள்ள
மொகலாயப் பேரரசன் அவனை நோக்கி,
ஊக்கத்தால் என்பாட்டன் உயர்ந்தார், சற்றும்
ஒளிக்காமல் வரலாற்றை எழுதி வைத்தார்.
பாக்கொன்றைக் கடிப்பதற்குள் லோடி மன்னன்
படையதனை முறியடித்து வெற்றி கண்டார்.
நேர்க்கோட்டில் அவர்நின்றார்! நானும் மக்கள்
நிழற்கோட்டில் நிற்கின்றேன் என்று கூறி,

ஆட்டத்தில் நாட்டத்தைச் செலுத்த லானான்.
ஆங்கந்த நேரத்தில் காதற் பார்வை
ஒட்டத்தை அக்கவிஞன் நிறுத்த லானான்.
ஒவியமும் அவ்வாறே நிறுத்த லானாள்.
பாட்டரசன் மெதுவாக நிமிர்ந்தான். வெற்றிப்
படையரசன் அப்போதக் கவியை நோக்கி,
ஏட்டரசே! என்மகளாம் இவளைப் பற்றி
இப்போதே வர்ணித்துப் பாடென் றிட்டான்.

எச்சில்முத்தம் இடாதவளை அதுநாள் மட்டும்
எவருளத்தும் புகாதவளைக் கூர்ந்து நோக்கிக்
கச்சிதமாய் வர்ணித்தான் கவிஞன். அன்னோன்
கற்பனையைக் கேட்டுவியப் புற்ற வேந்தன்,
அச்சரத்துக் கோர்லட்சம் தரலாம்; மேலும்
அள்ளியள்ளித் தந்திடலாம்; கவிஞர் கோவோ!
இச்சமயம் உனக்கேதும் வேண்டு மென்றால்
என்னைக்கேள் தருகின்றேன் என்று ரைத்தான்.