பக்கம்:அமுதும் தேனும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

74


தென்னகத்தில் பிறந்தவனே! எதையும் நன்கு
தேர்ந்தெடுக்கத் தெரிந்தவனே! கவிக்கோ மானே!
என்னுடைய காலத்தை உலகில் வாழ்வோர்
எல்லோரும் பொற்காலம் என்கின் றார்கள்!
உன்னுடைய காவியத்தைப் படித்தோர் உன்னை
உமர்கையாம், பிர்தெளலி, என்கின் றார்கள்.
என்புதல்வி உன்னைத்தான் விரும்பு கின்றாள்
என்பதனைக் குறிப்பால்நான் தெரிந்து கொண்டேன்.

முன்கோபம், அக்கோபம் மோனைக் கோபம்.
மொகலாய பரம்பரைக்கே உரிய கோபம்.
பின்கோபம், அக்கோபம் எதுகைக் கோபம்.
பெரும்பாலும் என்தந்தைக் கிருந்த கோபம்.
என்கோபம் போர்வாளைத் தேடும் கோபம்.
ஈங்கதனை நான்காட்ட விரும்ப வில்லை.
பொன்னைத்தான் நீகேட்பாய் என்றி ருந்தேன்
புதல்வியையே பரிசாகக் கேட்டு விட்டாய்.

அந்தமதம் இந்தமதம் என்கின் றார்கள்.
அன்றாடம் குறைகூறித் திரிகின் றார்கள்.
வந்தமதம் உங்கள்மதம் என்கின் றார்கள்.
வரலாற்றைப் புராணத்தால் மறைக்கின் றார்கள்.
சிந்தனையில் தெளிவில்லார் எங்க ளோடு
சேர்ந்துண்ணக் கூடாதென் றெதிர்க்கின் றார்கள்.
இந்துமுஸ்லீம் சேர்ந்துண்ணா இக்கா லத்தில்
எதிர்ப்புக்கும் அஞ்சாமல் என்னோ டுண்டாய்.