பக்கம்:அமுதும் தேனும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

80


மண்சட்டி என்சட்டி இதனை மக்கள்
    மதிப்பதில்லை என்றாலும் மதிக்கின்றேன்நான்.
மண்ணென்றால் அணுவென்று பொருளாம். பூமி
    மண்ணைப்போல் நம்முடலும் அணுவின் சேர்க்கை.
எண்ணங்கள் நம்நெஞ்சின் அணுக்க ளாகும்.
    எப்பொருளின் உட்புறத்தும் அணுக்கள் தூங்கும்.
மண்ணணுக்கள் பிரசவித்த பொருள்க ளன்றோ
    மாணிக்கம், ஆணிப்பொன், வெள்ளி எல்லாம்.

இக்கருத்தை உணர்ந்தன்றோ எனது பேரன்
    இதையெனக்கு விருப்பத்தோ டனுப்பி யுள்ளான்.
எக்கணமும் மாற்றத்திற் குரிய வாழ்க்கை
    இவ்வாழ்க்கை என்பார்கள். நேற்றோ என்றன்
பக்கத்தில் பொற்கிண்ணம். இன்றோ என்றன்
    பக்கத்தில் மண்சட்டி களிமண் பள்ளம்.
பக்குவமாய்க் காப்பாற்றா விட்டால், கையே
    பாத்திரமாய் ஆனாலும் ஆகுமென்றான்.