பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

மிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினர்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த அரிய செயல்கள் விளங்குகின்றன.

சங்க காலத்து நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றில் இத்தகைய பெருமக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிக்கும் பாடல்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் எழுந்த தொண்டை மண்டல சதகம், கொங்குமண்டல சதகம், தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றில் பிற்காலப் பெருமக்களின் பெருமையைக் காட்டும் அரிய நிகழ்ச்சிகளைப்பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.

இத்தகைய இலக்கியங்களிலுள்ள பாடல்களை ஆதாரமாகக் கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்கும் விளங்கம் வண்ணம் எழுதிய கதைகள் இவை. உரையாடல்களும் வருணனைகளுமாக அமைத்துக் கதை வடிவத்திலே அந்த நிகழ்ச்சிகளை விரித்துக் காட்டியிருக்கிறேன்.

தமிழ் காட்டில் முன்பு வாழ்ந்திருந்த மன்னர்களின் வீரத்தையும் வள்ளன்மையையம், வேறு செல்வர்களின் கொடைச் சிறப்பையும். புலவர்களின் சிறப்பையும் மாணவர்கள் அறிவதற்கு இந்தக் கதைகள் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

"காந்த மலை"

கி. வா. ஜகந்நாதன்

கல்யாண நகர் சென்னை-28

29-12-67