பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

 அவர்கள் காரியமே குறி. இந்தச் சமயத்தில் நீங்கள் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன்."

"என்ன அது?" என்று கொடைவள்ளல் கேட்டார்.

"வழியில் போகிறவர்களெல்லாம் உங்களைத் தொந்தரவுபடுத்தக் கூடாது என்பது என் கருத்து. நான்கு ஐந்து நாட்களுக்குமுன் ஒரு பேர்வழி வந்தான். உங்களைக் காணவேண்டும் என்று சொன்னான். என்ன காரியம் என்று கேட்டேன். 'ஒன்றும் இல்லை; சும்மா பேசுவதற்குத்தான்’ என்று சொன்னான். அதற்கு இது நேரம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.”

"அவர் யார் என்று தெரிந்ததோ?"

'யாரோ புலவனாம். புலவனுக்கு இப்போது என்ன வேலை? நல்ல சாப்பாடு போட்டுப் பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கலாம். பல்லை இளித்துக்கொண்டு இந்திரனே சந்திரனே என்று பாடுவான்.”

அவர் பேசிக்கொண்டிருக்கையிலே இடைமறித்து வாணராயர், "புலவரையா போகச் சொன்னீர்கள்?" என்று கேட்டார்.

"ஆமாம், யாரோ சோம்பேறி!” என்று அலட்சியமாகச் சொன்னார் அந்த மனிதர்.

"அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? புலவர் வந்திருந்தால் என்னிடம் அழைத்துக்கொண்டு வந்திருக்கக் கூடாதோ?" என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கேட்டார்.

"அந்தச் சமயத்தில் அவனை வேறு அழைத்து. வந்தால், அவன் எதையாவது சமயம் அறியாமல், அளக்க ஆரம்பித்து விடுவானே!"

"உங்களுக்குப் புலவர்களின் பெருமை நன்றாகத் தெரியாது என்று நினைக்கிறேன். இந்த வீட்டில் யாருக்கு நுழைய உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் புலவர்-