பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79



"இந்த அக்கிரமம் எங்காவது நடக்குமா?" என்று புலம்பினாள் அவள்; "இந்தக் குன்றக்குடி முருகன் கண் இல்லாமல் போய்விட்டானா?" என்று கூவினாள்.

புலவர் அவளுக்கு ஆறுதல் கூறினார். "நல்ல வேளை, நம்முடைய உயிருக்கு ஆபத்து நேராமல் இருந்ததே; அதுவே ஆண்டவன் திருவருள்தான்" என்று சொல்லித் தேற்றினர். "இந்த நடுவழியில் நின்றுகொண்டு இனி என் செய்வது? திரும்பிப் போகவும் இடம் இல்லை. வந்தது வந்துவிட்டோம். பல்லைக் கடித்துக்கொண்டு சிவகங்கைக்கே போய்விடுவோம்" என்றார்.

அவர்கள் மறுபடியும் நடக்கத் தொடங்கினர்கள். நள்ளிரவில் சிவகங்கையை அடைந்து அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் தங்கினார்கள். இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புலவருடைய மனைவி அழுது கொண்டே இருந்தாள்.

விடிந்தது. தன்னுடைய கணவன் அருகில் இருக்கும்போதே தாலியை இழந்த வேதனையைச் சகிக்க முடியாமல் புலவர் மனைவி திண்ணையோரத்தில் ஒன்றிக் கொண்டிருந்தாள். புலவர் மெல்ல அவளை எழுப்பி அங்கே உள்ள சத்திரம் ஒன்றை அடைந்தார். அவளை அங்கே இருக்கச் செய்துவிட்டுப் பாண்டியரைப் பார்த்து வரப் புறப்பட்டார்.

வேறு சமயமாக இருந்தால் அவர் மருத பாண்டியரைப்பற்றிப் பல பாடல்களைப் பாடிக்கொண்டு போயிருப்பார்; ஒரு பிரபந்தமே எழுதிக்கொண்டு போயிருப்பார். இப்போது அவ்வாறு செய்ய அவர் மன நிலை இடம் கொடுக்கவில்லை. இரவில் தமக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தபோது அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த அக்கிரமத்தை முறை-