பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


பற்றிக் கொண்டார்கள். மருத பாண்டியரே தம் இருக் கையை விட்டு எழுந்து வந்து புலவரைத் தடவிக் கொடுத்தார். "நீங்கள் வருந்த வேண்டா. என்ன நடந்ததென்று சொல்லுங்கள். உங்கள் குறையை முதலில் தீர்த்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்" என்றார்.

புலவர் மெல்லத் தம் நிலைக்கு வந்தார். இடையிடையே துயரம் தடுத்தாலும் தட்டுத் தடுமாறி நடந்ததைச் சொன்னர். "துரையவர்கள் வீரம் மிக்கவர்கள் என்றும், இந்த நாட்டில் கட்டுக் காவல் அதிகம் என்றும், பொல்லாதவர்கள் வாலாட்ட மாட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அந்தத் துணிவினால்தான் புறப்பட்டேன். என்னைத் திருடர்கள் அடித்திருந்தாலும் கவலைப்பட மாட்டேன். ஒரு பெண்மணி தன் மங்கலியத்தை இழப்பதென்றால்-"

"புலவரே, நடந்தது நடந்துவிட்டது. அந்தப் பாவச் செயலுக்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாளி தான். உங்கள் மனைவி எங்கே இருக்கிறாள்? அந்த அம்மாளை உடனே அரண்மனைக்கு அழைத்து வாருங்கள். பிறகு மற்றக் காரியங்களைப் பார்த்துக் கொள்ளலாம்" என்றார் மருதபாண்டியர்.

அதிகாரி ஒருவருடன் வண்டியில் புலவர் தாம் தங்கியிருந்த சத்திரத்துக்குச் சென்றார். தம் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு வந்தார்.

அதற்குள் அறிவிற் சிறந்த மருத பாண்டியர் அவ்வூரில் இருந்த பொன் வாணிகர் வீடுகளுக்கெல்லாம். ஆட்களை அனுப்பினார். யாரிடத்தில் புதுத் தாலி இருந்தாலும் உடனே வாங்கிவர வேண்டும் என்று கட்டளையிட்டனுப்பினார். ஒன்றுக்கு இரண்டாகத் தாலிகள் வந்தன.