பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. காங்கிரசு நூலகத்திலே இசையரங்கம்

வாசிங்க்டன் என்பது அமெரிக்காவின் தலைநகர், அந்தத் தலைநகரின் ஒரு பகுதியிலுள்ள இசையரங்கத்தின் வாசலில் ஒவ்வொரு நாள் காலையிலும் எண்ணற்ற மக்கள்கூட்டம் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருப்பதை நாம் இன்றும் காணலாம். ஒருபக்கம் நுழைவுச் சீட்டறையின் திறப்புக்காக நாட்டுப்புற மக்கள் செய்தி இதழினைப்பார்த்துக்கொண்டே காத்துக்கொண்டிருப்பார்கள். மற்றொரு பக்கம் இளைஞர் கூட்டம் பேசிக் கொண்டும், அரட்டையடித்துக்கொண்டும், கைகளைத் தேய்த்துத் தேய்த்து, கொட்டும் பனிக்குப் போராடிக் கொண்டும் இருப்பார்கள். பிறகு வாரத்தில் ஒரு நாள் இதேபோன்றதொரு கூட்டத்தை நாம் காங்கிரசு நூலகத்தின் அடித்தாழ்வாரத்தின் முன்னாள் நுழைவுச் சீட்டுக்காகக் காத்துக்கொண்டிருப்பதை நாம் காணலாம். இத்தனை பேரும் இசைவிரும்பிகளாவர். இவர்கள் காங்கிரசு நூலகம் காசில்லாமல் அளிக்கும் தேனிசைக்குப் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள்.

வாசிங்க்டனுக்கு இசைமூலம் இந்தப்பெருமை வந்தமைக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இரண்டு பெண் மக்களே. நகரிலே இசைமாரி பொழியவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை அள்ளித்தந்தனர் அந்த ஆரணங்குகள்.

முதன் முதல் இசையரங்குக்கு உதவி செய்தவர் திருவாட்டி கோலிட்ச் (Elizabeth Sprague Coolidge) என்பவராவர். அந்த அம்மையாரே ஓர் இசைவாணியாவர். அவருக்குப் பியானேவிலே சிறந்த தேர்ச்சியும், இசைப்பாக்களை இயற்றுவதிலே பயிற்சியும் உண்டு.