பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


பல்கலைக்கழக நூலகத்தின் குறிப்பிடத்தகுந்த பகுதிகளுள் ஒன்று அரிதிற் கிடைக்கும் நூல்கள் உள்ள பகுதியாகும். இது மாணவர்க்கு அறிவுச் செல்வத்தை வாரி வழங்கும் பிற பகுதிகளோடு ஒத்த சிறப்புடையதாகும். இதன் வளர்ச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறை, இருப்பு நிதி ஆகியவற்றைப் பொருத்ததாகும்.

உலக அரசியலாராய்ச்சிக்கு இன்றியமையாத அயல் நாட்டு வெளியீடுகள், அறிக்கைகள் ஆகியவையும் பல்கலைக்கழக நூலகத்திலே இருத்தல் மிகமிக வேண்டியதாகும். இதற்காகப் பல நூலகங்கள் அயல் நாட்டுப் பல்கலைக்கழக நூலகங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளுகின்றன.

பல்கலைக்கழகமும் அதன் நூலகமும் இணைந்தும் குழைந்தும் இயங்குவது பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி, நாட்டுக்கே நலம் பல பயக்க வல்லதாகும். பொதுமக்களுக்குக் கிடைக்கும் நூலக வசதிகளோடு இங்கு நடைபெறும் சொற்பொழிவுகளும், தனி வகுப்புகளும் பெரும் பயன் அளிக்கவல்லவையாகும்.

நூலகம் என்பது பல்கலைக்கழகத்தின் கலலச் சுரங்கங்களுள் ஒன்றாகும். அங்கே பேசும்படக் காட்சிகள், பேசாப்படக் காட்சிகள் காண்பிக்கப்படும். ஓவியங்கள் சேர்த்துக் காக்கப்படும்; பிற கலைகளும் களிநடம்புரியும். பல்கலைக்கழக நூலகத்தின் மற்றொரு தனிச் சிறப்பு சிறு சிறு வகுப்புகள் நடத்திப் பட்டப் படிப்பு மாணவர்க்கு ஆராய்ச்சியறிவையும் ஆராய்ச்சி வேட்கையையும் ஊட்டுவதாகும். உலக அரசியல், தொழில்துறை ஆகியவை பற்றிய சொற்பொழிவுகளை ஏற்பாடுசெய்தலும், அவை பற்றிய திரைப்படங்களைக் காட்டலும் பல்கலைக்கழக நூலகப் பணிகளாகும். பல்கலைக்கழக நூலகத்தின் பணிகளுள் தலையாயது நூலக விரிவுத்திட்டமாகும்.