பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினான்கு

மாலை இரண்டு மணிக்கு ஏரிக்கரை நண்பர்களை நோக்கி மண்ணாங்கட்டி செல்லுகிறான். அந்தக் குறவர் குடிசைகள் அதிரும்படி இரண்டு குறவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மண்ணாங்கட்டி நடுங்குகிறான். அவர்களை நோக்கி விரைந்து செல்லுகிறான். ஆயினும் மண்டையுடை பட்ட குறவன் பெரிய பண்ணையாரை நோக்கி ஓடுவதை மண்ணாங்கட்டி பார்க்கிறான். அவன் உள்ளமும் கைகால்களும் நடுங்குகின்றன. மண்டையுடைந்தோடும் அந்தக் குறவனைப் பின் பற்றி மண்ணாங்கட்டி ஓட முயல்கிறான். ஆயினும் குறவன் மறைந்துவிடுகின்றான். மண்ணாங்கட்டி ஏரிக்கரையிலிருந்த ஓர் ஆலமரத்தின்மேல் ஏறி நடப்பதைப் பார்க்கும் கருத்தால் காத்திருக்கிறான். சிறிது நேரத்தில் பெரிய பண்ணையும், அவர் ஆட்கள் சிலரும் குறவர் குடிசையை நோக்கி வருகிறார்கள். குறவர்கள் பலர் பிள்ளைகுட்டிகளுடன் வீட்டைவிட்டு வெளிநோக்கி ஓடி மறைகிறார்கள். மண்டையை உடைத்த குறவன் தலையைத் துணியால் மறைத்துக்கொண்டு அச்சத்துடன் ஓடி மறைகிறான்.

பெரிய பண்ணையாரும் ஆட்களும் மண்டையுடைந்த குறவனும் குடிசைகளை அடைகிறார்கள். பல மண்வெட்டிகள், இருப்புப் பாரைகள், தோண்டி எடுக்கப்படுகின்றன. குடிசைகளிலும் மண்வெட்டிகள் எடுத்து ஒருபுறமாக வைக்கப் படுகின்றன. ஆட்கள் சிலர், குறவர் ஓடிய வழிநோக்கி விரைவாகச் செல்லுகிறார்கள். பெரியபண்ணையார் வீடு நோக்கிச் செல்லுகிறார்.

27