பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை

103

அவ்வத் துன்பிற் களவே யில்லை
கானலை நீரெனக் கருதித் தவறாய்

120 மானினம் ஓடுதல் மான மாந்தரும்
இன்பம் தேடி என்றும் அலைவர்
இன்பம் கானலை ஏய்ப்பதாகும்
துன்பமே வாழ்க்கை முழுவதும் தோய்வது
இதற்கா கடவுள் எல்லாம் படைத்தார்?

125 முதற்கண் இதற்கு முதலது மொழிகெனக்
கண்ணனார் வினவக் கம்பர் கூறுவார்:
கடவுள் செயலில் காண்கிறீர் நவைகள்;
கடவுள் நம்பகக் கருத்துண் டோவென,
இறைவர் எங்கேன் எப்படி யிருக்கிருர்?

130 இறைவர் ஒருவர் இருப்பதும் உண்மையோ?
அறைவிரோ அவர்தாம் இருக்கும் இடத்தை?
காட்டு வீரோ காணும் படியெனக்
காட்டமாய்க் கண்ணனார் கழற, கம்பர்,
பெற்றோரின்றிப் பிள்ளைகள் ஏது?

135 கற்றோ ரின்றிக் கல்விநூல் ஏது?
கட்டுவோ ரிலாது கட்டடம் ஏது?
நட்டுவர் இலாது நாட்டியம் ஏது?
நெய்வோர் இலாமே நெசவுடை ஏது?
செய்வோர் இலாமே செயற்கைகள் ஏது?
எனவே,

140 கடவுள் இன்றிக் காசினி ஏது?
புகையால் நெருப்பைப் புரிந்து கொளல்போல்
காணும் உலகால் கடவுளை நம்பலே
மாணும் செயலாம் மாற்றம் இலையென,
கேட்ட கண்ணனார் கிளத்துவார் மேலும்:


118. துன்பு - துன்பம். 122 ஏய்ப்பது-ஒப்பது. 125. முதல் - காரணம். 127. நவைகள் - குற்றங்கள். 128. நம்பகம் - நம்பிக்கை. 133. காட்டமாய் - உறைப்பாய். 137. நட்டுவர் - நடனம் கற்றுத்தருபவர். 140. காசினி - உலகம். 143. மானும் - சிறப்புடைய, மாற்றம் - மாறுதல். 144. கிளத்துவார் - சொல்லுவார்.