பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறூஉக் காதை

149

“அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை யிதுவென வுணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்”

50 என்று சுதமதி இயம்பினுள் அன்றோ?
நன்றா யிதனை நானும் அறிகுவல்.
மேகலை துறவு மேற்கொண் டதனால்
ஆகல் ஒண்ணுமோ அவள்மேல் காதல்?
அதனால் சுதமதி அரசன் மகற்கொரு

55 விதமாய்க் கூறி விரட்டி விட்டாள்.
அமரா வதியோ அன்னள் அல்லளே;
தரமாய் என்னைத் தான்மிகக் கருதுவாள்.
வன்மையாய் ஒருத்தியை வம்புசெயல் தகாது.
என்மேற் காதலாய் இருக்கும் ஒருத்தியை

60 மணக்கயான் விரும்புதல் மாண்புடைச் செயலே
தணக்கநீர் முயல்வது தகுதி யாமோ?
என்றம் பிகாபதி இயம்ப, கம்பர்,
நன்றுன் பேச்சு! நமது தகுதியொடு
ஒன்றிய நங்கை ஒருத்திபால் காதல்

65 கொள்ளலை ஏற்றுக் கொள்ளலாம் ஒருகால்;
உள்ளின் மலையொடு ஒவ்வுமோ மடுதான்!
வேந்தர் தகுதியோ வியன்மலை; வாழ்குடி
மாந்தர் தகுதியோ மடுபோல் தாழ்ந்தது.
எட்டாப் பழமது இனிக்கா தெனவிடு

70 கிட்டாப் பொருட்காக் கீழ்ப்படல் அறிவோ?
எனவே அவளை மணக்கலாம் என்பதை


46. அவலம் - துன்ப நிலை; கையாறு - செயலற்ற நிலை); அழுங்கல் - அழுகை. 47. தவலா - நீங்காத, 49. மிக்கோய் - மேலானவனே; புறமறிப் பாராய் - உடம்பை, உள்ளிருப்பவை வெளியிலும் வெளியிலிருப்பவை உள்ளேயும் மாறும்படி திருப்பிப் பார்ப்பாய். 52. மேகலை - மணிமேகலை. 57. தமராய் - தம்மவராய். 61. தணக்க - பிரிக்க. 65. ஒருகால் - ஒருவேளை, 66. உள்ளின் - நினைத்துப் பார்க் கின்; ஒவ்வுமோ - ஒக்குமோ. 67.68. குடிமாந்தர் - குடிமக்கள்.