பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி சிறையில் அடைபட்ட காதை

187.

ஒப்பா திவற்றை மறுக்க வொண் ணாது.
நங்குடும் பத்தில் நான்முதற் பிரிந்து
அங்குச் செல்கிறேன் அழுகை யிதற்கேன்?
இங்கிருந்த பின்னே எல்லாரும் வருவீர்.

110 பயிற்சிக்கு முன்யான் ஏற்கப் படுகிறேன்
பயிற்சி முடித்துநீர் பாரிற் பிரிவீர்.
அயலூ ருக்கோ அயல்நாட் டிற்கோ
உயச்சென் றியானும் உள்ளதாக் கொண்மின்;
துளக்க மிலாதுநம் தூயவீ டேகுமின்;

115 விளக்கம் இதற்குமேல் வேண்டா என்றே
அம்பி காபதி, அழாதழு துரைத்தான்.
காவலர் வந்து கம்பருள் ளிட்ட
மூவர் தம்மையும் முயன்று வெளியேற்றினர்.
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே

120 அரும்புகண் ணிருடன் அனைவரும் பிரிந்தனர்.
கூடினோர் பிரிந்தால் கூற வேண்டுமோ!
நாடி தளர்ந்தே நடந்தனர் மனைக்கே.
அரசன் அன்றிரா அரசு வேலையாய்ப்
பரசுதஞ் சைக்குப் பயண மானதால்

125 அன்னையின் துணையோ டமராவதியும்
துன்னினள் சிறையை, தொழுதாள் அம்பியை.
அன்னை வெளியே அமர்ந்திருந் ததனால்
கன்னி தன்னுறு காதல னுடனே
என்னவும் பேச இயல்வதா யிற்று.

130 காதலர் இருவரும் கட்டித் தழுவினர்
சாதலை எண்ணிச் சாய்த்தனர் கண்ணிர்.


111. பாரிற் - பாரின் - பூவுலகிலிருந்து. 113. உய - பிழைப்பதற்காக, வாழ்க்கை நடத் துவதற்காக. 114. துளக்கம் - நடுக்கம், அதிர்ச்சி. 124. பரசு தஞ்சை - போற்றுதற்கு உரிய தஞ்சாவூர். 131. சாய்த்தனர் - (குடத்திலிருந்து சாய்ப்பது போல்) நிறையக் கொட்டினர்.