பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அம்பிகாபதி)

என்னுடை முடிவிற் கினைகிறே னல்லேன்!
உன்னுடை வாழ்வை உருக்குலைத் ததற்கே
பதைக்கிறேன் என்றே அம்பி பகர்ந்திட,

(அமராவதி)

135 வதைக்கச் செய்துமை மன்னர் வருத்த
யானே காரணம் யாது செய்வேன்!
தேனா யினித்த அன்று தெரிகிலேன்
வீணா யும்முயிர் விலகச் செய்துளேன்
பொறுத்தருள் கென்று பூவை பணிய,

(அம்பிகாபதி)

140 மறுத்து மொழிவான் அம்பி மற்றே!
நின்னை முதலில் நிலாவிற் கண்டே
என்னை மறந்தது என் குற் றமேயாம்;
எனது செய்கையா லன்றோ இங்ஙனம்
நினதுள் ளத்தில் நிகழ்ந்தது மாற்றம்;

145 உனது குற்றம் ஒன்று மில்லை
எனது குற்றமே எல்லாம் என்ன,

(அமராவதி)

‘அமரு’ அதனை அறுத்து மொழிவாள் !
அமர ஆயின், அரிவையர் ஆண்களை
மயக்கும் அளவில் மண்ணுதல் தகாது.

150 வியக்க மங்கையர் வேடிக்கைப் பொருளோ!


132. இனைகிறேன் - வருந்துகிறேன் 137. அன்று - அன்றைக்கு, அந்த நாள். 139. பூவை - அமராவதி. 141. நிலாவில் - நிலவொளியில். 144. மாற்றம் - (காதல் கொண்ட மாறுதல்). 147. அறுத்து - வெட்டி, மறுத்து, 148. அமர - அமைதியாக. 149. மண்ணுதல் - அலங்காரம் செய்தல்.