பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

அம்பிகாபதி காதல் காப்பியம்



"தள்ளாடி நடந்து தெருவில் தரையிலே
நில்லாது வீழ்ந்து நெட்டுடல் கிடத்திச்
சொல்லாது மாண்டான் சோழன் மகனே.
கற்பழிக்கப் பட்ட களங்கம் பொறாதியான்
200பொற்புறு தமையனைப் பார்க்கவும் போகாது
தற்கொலை செய்து கொள்ளத் தலைப்பட்டேன்.
நீவிர் அறியவிந் நீண்ட மடலை
வேவ நெஞ்சம் விரைந்து வரைந்தேன்.
அதிர வேண்டா! அறையில் கம்பங்
205குதிருக் குள்ளே குதித்து மாள்வேன்.
மடலைப் படித்து மயங்கா துள்ளம்
திடமாய்க் குதிர்க்குள் தேடி என்னை
எடுத்தே எல்லா ஈமச் செயல்களும்
முடித்து நீவிர் முன்போல் வாழ்வீர்”
210என்றம் மடலில் எழுதி யிருந்ததைக்
குன்றி யுள்ளங் கொதித்துப் படித்தபின்,
குதிரி லிருந்து குமரியை எடுத்தே
எதிரில் கிடத்தி இயம்பொணாத் துயரொடும்
அலைகடல் துரும்பென ஆலேவாய்க் கரும்பென
215நிலைகொள் ளாத நெஞ்சொடுங் கலங்கிப்
பெற்றோ ரிருவரும் பேதுற லாயினர்;
பற்றோடு வளர்த்த பாவை காவிரிமேல்
வீழ்ந்து புரண்டு விம்மி யழுதனர்;
ஆழ்ந்த துயரதை ஆற்றாது மயங்கினர்;
220”'பட்ட காலே பட்டிடும்’; அதுபோல்
கெட்ட குடியே கெட்டிடும்” எனும்படி
இடிமேல் இடிவிழ ஏங்கிப் புலம்பினர்.


204-205. கம்பங் குதிர்-கம்பு கொட்டியுள்ள தொம்பை; கம்புக் குதிருக்குள் குதித்தால், புகை மண்ணில் புதைவது போல, உடம்பு குதிரின் அடிக்குப் போய்விடும்; தலைக்கு மேல் கம்பு இருப்பதால் மூச்சு விட முடியாமல் இறப்பு நேரும். 216. பெதுதல் - மயங்குதல். 217. பாவை - பெண்.