பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்துப் பகுதி

தமிழ் வாழ்த்து

(1) தமிழரின் பெருமை சாற்றும்

தனிப்பெருஞ் சான்றாய் நின்று

இமிழ்கடல் உலக மெங்கும்

இசையினைப் பரப்பி யோங்கும்

அமிழ்தமே மக்கட் காக்கும்

ஆருயிர் மருந்தே தேனே!

தமிழெனும் ஒப்பில் தாயே!

தழைத்துநீ என்றும் வாழி!'

(2) “மொழிதம்முள் மூத்த முதல்மொழியே அடுத்த

மொழிகள் பலவும்

அழிவுறவும் அழியா அன்னமொழியாய் அமர்ந்தே

அரிய குழவி

மொழிகள்பல ஈந்தும் மூப்பில்லாக் குமரியே!

முதிர்ந்த உலக

மொழிகட்கு வேர்ச்சொல் முதலளித்த முத்தமிழ்

மொழியே வாழ்கவே”

(3) வள்ளுவனை உலகிற் கீந்த

வளமார்ந்த திருவே தேவே!

அள்ளிக்கொள அமிழ்த நயத்தை

அளித்திடுபல் கலையின் அன்னாய்!


முதல் பாட்டு: இமிழ் கடல் - ஒலிக்கும் கடல்; இசை, புகழ்; "உலகத் தமிழ் என்னும் புகழுடன் ஒங்குதல். 3. மக்கட் காக்கும் - மக்களைக் காக்கின்ற. இரண்டாம் பாட்டு: 1. அடுத்த - தமிழை அடுத்துத் தோன்றிய. 2. குழவி - குழந்தை. முன்றாம் பாட்டு: 3. அன்னாய் - அன்னையே.