பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. காதலர் காட்சிக் காதை,


தலைநக ரதனில் தன்னே ரில்லாக்
கொலைவேற் குலோத்துங்க சோழன் கோயிலின்
நிலாமுற் றத்து நின்று கீழே
உலாவு வோரை உற்று நோக்குவாள்

5 அரசன் மகளாம் அமரா வதியெனும்
உரைசால் கற்பின் உயரிய கன்னி
பாங்கியர் பல்லோர் பாங்குற மின்னி;
ஆங்கவள் முகமதி அமிழ்தைப் பொழியுமால்..

(அமராவதியின் தோற்றம்)

கருமை மென்மை கருதிடும் நீட்சி
10 சுருளும் வளைவு சொலத்தகும் செறிவு
ஐம்பால் தகுதியும் அமைந்துகண் டோரை
வம்பா யீர்க்கும் வசியக் கூந்தல்,
மறலியும் அஞ்ச மாப்படை வெல்லும்
மறவர் தம்மையும் மயக்கும் பிறைநுதல்,
15 காந்தம் இரும்பைக் கவருதல் நேரக்
காந்தும் காளையர்க் கட்டிடுங் கண்கள்,
பவள உவமை பற்றுமோ வாய்க்கே!
அவளது கன்னம் அழன்று மின்னும்,
பத்தியா யமைந்து பளிச்சொளி வீசி
20 முத்தைப் பழிக்கும் முறுவல் வெண்ணகை,


2. கோயில் - அரண்மனை. 7. பாங்கியர் - தோழிமார்; பாங்கு - பக்கம். 10. செறிவு - அடர்த்தி. 11. ஐம்பால் - கூந்தலின் ஐந்து தன்மை. 13. ஈர்த்தல் - இழுத்தல். 13. மறலி - எமன். 14. நுதல். நெற்றி. 15. நேர - ஒப்ப. 19. பத்தி - வரிசை. 30. முறுவல் - சிரிப்பு.