பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அம்பிகாபதி காதல் காப்பியம்

நிலவே நிலவே நீகீழ் இறங்கி
வருகை தருவையோ வாரா யென்னின்

70 அருகில் யான்வந் தழகைப் பருகவோ?
மாற்றம் என்கொல் மயக்குதல் முறையோ?
கூற்றமாய் என்னைக் கொல்லல் தகுமோ?”
என்றனன்; அமரா வதியின் எதிரில்
நின்றனன் சிலைபோல் நெட்டுயிர்ப் பெறிந்தே!

(கேட்ட அமராவதியின் நிலை)

75 கேட்ட அமராவதி கிளர்ச்சி யுற்றனள்,
நாட்டந் திருப்பினள், நாணிக் குனிந்தனள்;
பொன்னிறத் திருமுகம் செந்நிற மாயது;
புதியவன் உளத்தில் புகநேர்ந்த தெண்ணி
மதியது கலங்கி மாழ்கி வீழ்ந்தனள்.

80 தோழியர் கவன்றனர்; சோழனைக் கண்டனர்;
வாழியர் வேந்தென வணக்கம் செலுத்தினர்;
நடந்தது கூறினர் நாத்தழு தழுக்க.
கிடந்த மகளைக் கிள்ளி கண்டனன்;
விடிந்ததும் இதற்கோர் விடிவு காண்பனென்

85 றடங்காச் சினத்திற் கடிமைப் பட்டனன்;
மகளைக் கன்னி மாடத் துய்த்தே
அகலாது காக்க ஆவன புரிந்தனன்.
சோழமா தேவி சோர்ந்து வருந்தி
வாழி மகளென வணங்கினள் தெய்வம்.

(அமைச்சர் மகளின் காதல்)

90 அமரா வதியை அகலாப் பாங்கி
அமைச்சர் மகளாம் அழகு தாரகை'

71. மாற்றம் - பதில். 72. கூற்றம் - எமன். 74. நெட்டுயிர்ப்பு எறிதல் - பெருமூச்சு விடுதல். 79. மாழ்கி - மயங்கி. 80. கவன்றனர் - கவலைப்பட்டனர். 83. கிள்ளி - சோழன்.