பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அம்பிகாபதி காதல் காப்பியம்

இன்பம் நல்கும் இனியவப் பொழிலின்
சிறப்பு முழுதும் செப்புதல் எளிதோ?

55 மறப்பரு பயனுறு மரவகை பற்பல
தேனினும் இனிய தீங்கனி பயந்து
வானுற வோங்கி வயங்கி நிற்குமால்.
இயற்கையின் அறைகூவலை ஏற்றுவென் றாற்போல்
செயற்கையா யமைத்த செய்குன்று ஒருசார்;

60 இஞ்ஞா லத்தில் இருட்கொரு வெற்றியாய்
செஞ்ஞா யிற்ருெளி சிறிதும் புகாத
அஞ்செம் மரங்களின் அடர்செறி வொருசார்;
வேங்கையின் தோலை விரித்துவைத் தாலெனப்
பாங்குறு பன்மலர்ப் பரப்பது மறுசார்;

65 கன்னி வேம்பும் காளை அரசும்
மன்னு காதலர் மயங்கினாற் போலப்
பின்னு கிளைகளாம் கைகளாற் பிணைந்து
துன்னி யிருக்கும் தோற்றம் ஒருபால்;
கொழுநரோ டிணைந்த குலப்பெண் நிகரக்

70 கொழுகொம்பு சுற்றிய கொடிவகை யொருபால்;
காதலர்ப் பிரிந்தோர் கவன்று வாடவும்
சாதலை யவர்க்குச் சாற்றுதல் போலவும்
அன்றிற் பேடையும் சேவலும் அணைந்தே
ஒன்றி யெழுப்பும் உருக்கொலி மறுபால்;

75 பல்வகை மலர்க்கொடி பரவிய வாவியில்
சில்வகை மலர்கள் சிரிப்பாய்ச் சிரிக்கும்;
அகலிதழ் குவிந்துதாம் அயர்வுற் றிருந்த

57. வயங்கி - விளங்கி. 58. அறைகூவல் - சவால். 59. ஒரு சார் - ஒரு பக்கம். 60. ஞாலம் - பூமி, உலகம், இருட்கொரு - இருளுக்கு ஒரு. 62. அஞ்செம் - அம்செம் - அழகிய செம்மையான. 63. வேங்கை - புலி. 64. பாங்கு - நல்லியல்பு. 65. வேம்பு - வேப்ப மரம்; அரசு - அரசமரம். 69. கொழுநர் - கணவர். 73. சாற்றுதல் - அறிவித்தல். 73. அன்றில் - ஆணும் பெண்ணும் இணைபிரியாத ஒருவகைப் பறவை இனம். 75. வாவி - குளம்.