பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அம்பிகாபதிக்கு மடல் வந்த காதை

57

பகலெலாம் தம்மைப் பார்த்துச் சிரித்த
தாமரை குவிந்து தருக்கடங் கிடவே

80 ஏமம் இலாமே இருந்தவவ் விரவில்,
அல்லியும் நெய்தலும் ஆம்பலும் மலர்ந்தே
எள்ளி மரையை இன்பமாய்ச் சிரிக்கும்;
பரத்தையர் பலரொடு பயின்றே அழியும்
கருத்தே யில்லாக் கயவரே போல,

85 பகலில் மலரும் பல்வகை மலர்களே
அகலா திருந்தே அருந்தேன் உறிஞ்சி
இரவில் வெவ்வே றினத்து மலர்களில்
மருவுகள் ளருந்தி மயங்கும் ஞிமிறுகள்.
கன்னி மாடக் காவகம் ஆளும்

90 கன்னியர்க் கெதிர்ப்புக் கட்சிகள் பலவுள;
ஆடலில் தோற்ற அணிமயில் ஒருபகை
பாடலில் தோற்ற பண்குயில் மறுபகை
நடையில் தோற்ற அன்னம் நனிபகை
நாட்டம் தோற்ற நவ்விகள் கடும்பகை

95 முகத்திற்குத் தாமரை முற்றும் தோற்றதே
கண்ணுக்குத் தோற்றது கருங்குவளை யாகும்
கைக்குத் தோற்றது காந்தள் ஐயமென்!
தோட்கு மூங்கில் தோற்றது பழங்கதை
இன்னபல் கட்சிகள், காட்சிக ளிடையே

100 கன்னியர் ஆளுமக் காவின் ஒருபால்
முக்கா டிட்ட முழுநிலா ஒன்று
புக்கது கண்டனன் பூரிப்பு கொண்டனன்;

78. சிரித்த - பரிகசித்த, 80. ஏமம் - இன்பம். 81, நெய்தல் - ஒருவகை நீர்ப்பூ: 83. மரை - தாமரை (முதற் குறை); சிரித்தன - பரிகசித்தன. 83. பரத்தையர் - விலை மகளிர். 88. கள் - தேன், ஞிமிறு - வண்டு. 90. எதிர்ப்புக் கட்சிகள் - எதிர்க் கட்சிகள். 94. நாட்டம் - பார்வை; நவ்விகள் - மான்கள். 97. காந்தள் - கை போன்ற ஒருவகை மலர்; ஐயம்என் - சந்தேகம் என்ன. 98. தோட்கு - தோளுக்கு.