பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அம்பிகாபதி காதல் காப்பியம்

நூல்நடை:

எனது நூல் எளிய நடையினது. எளிய உலக வழக்குச் சொற்கள் சிலவும் திசைச் சொற்கள் சிலவும் நூலில் கலந்துள்ளன. அரிய சொற்கள் சிலவும் இயற்கையாகவே இடம் பெறத் தவறவில்லை.

எனது காப்பியம் ஆசிரியப் பாவால் ஆனது. சில இடங்களில் வேறினப் பாக்களும் இடையிடையே விரவியுள்ளன.

பெயர்க் காரணம்:

மணிமேகலை என வழங்கப்பெறும் காப்பியத்திற்கு ஆசிரியர் சாத்தனர் இட்ட பெயர் ‘மணிமேகலை துறவு’ என்பதாகும். இது போலவே யான் எனது நூலுக்கு ‘அம்பிகாபதி காதல்’ என்னும் பெயர் சூட்டினேன். அம்பிகாபதி என்று மட்டுமோ அல்லது ‘அம்பிகாபதி காதல்’ என்று மட்டுமோ யான் பெயர் சூட்டியிருப்பின், உரைநடையில் ஆராய்ச்சி நூல்கள் பல எழுதியிருக்கும் என்னால் எழுதப்பெற்றுள்ள இந்நூலும் ஓர் ஆய்வு உரைநடை நூலாகவே இருக்கும் என்று நூலின் பெயரை அறிந்தவர்கள் எண்ணக் கூடும். இந்தக் குழப்ப நிலையைப் போக்கவே, “அம்பிகாபதி காதல் காப்பியம்” எனப் பெயர் சூட்டினேன்.

முன்னோர் மொழி:

“முன்னேர் மொழிபொருளே யன்றி யவர் மொழியும்
பொன்னேபோல் போற்றுவம்”

(நன்னூல்-9)

என்பதற்கு ஏற்ப, முன்னேர் நூல்களிலுள்ள சில பகுதிகளை, பெயர் குறிப்பிட்டு எடுத்து இந்நூலில் கையாண்டுள்ளேன். குறள்கள் சில முழுதும் தரப்பெற்றுள்ளன. வேறு சங்க நூல்கள் சிலவற்றினின்றும் சில அடிகள் எடுத்துப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

இந்நூலில் தரப்பெற்றுள்ள தனித்தனிப் பாடல்களுள் “இட்டடடி நோக”, “சற்றே பருத்த தனமே”—என்னும்