பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. காதலர் உரையாடு காதை

மறுநாள், நடுவிரா மன்னன் மகளை
இறுகத் தழுவும் எண்ண அலையில்
தத்தளித் தம்பிகாபதி தனக்குள் பேசுவான்:
இத்தனை நாள்வரை எந்தவோர் பெண்ணையும்

5 தொட்டது மில்லை தோய முத்தம்
இட்டது மில்லையென் மார்பில் முலைகள்
பட்டது மில்லை பவள இதழ்சுவைத்
திட்டது மில்லை; இன்றிரா எல்லாம்
பொய்த்த லின்றிப் புலர்வதன் முன்னே

10 துய்த்தல் நிகழும்; தூமொழி யின்கைப்
பற்றும் போதியான் பதற்றம் உறுவனே!
மற்றவள் கன்ன மாங்கனி சுவைப்பனே!
மார்பொடு மார்பு மயங்கும் போதவள்
கூர்முலைக் கொம்பால் குத்துப் படுவனே!

15 “பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றுாறிய நீர்”என் பதுகுறள்;
ஞாலும் உதட்டை உறிஞ்சு ஞான்று
பாலும் தேனும் பருகு வேனே!
தழுவிப் பிணைந்து தரையில் புரள்கையில்

20 நழுவி யுடைகள் நகர்ந்து விழுமோ!
என்று மறியா இன்பச் சுனையில்
இன்று குளித்தியான் ஏறுவ னோகரை!
என்றெலாம் பற்பல எண்ணியம் பிகாபதி
தயிரிடை மத்தாய்ச் சுழன்று தவிக்கும்

7. இதழ் - உதடு. 9. புலர்வது - விடிவது. 10. துய்த்தல் - அனுபவித்தல். தூமொழி - தூய மொழி பேசும் அமராவதி. 15. பணி மொழி - குளிர்ந்த மொழி பேசும் பெண். 18, வால் எயிறு - வெண் பல். 17. ஞாலும் - தொங்கும்; ஞான்று - பொழுது.

அ.—5