பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அம்பிகாபதி காதல் காப்பியம்

 

(அம்பிகாபதி)


அன்றுனை யான்தொட அறவே மறுத்தனை
சென்றியான் தற்கொலை செய்துகொண் டேனா?
இருவரும் ஒருவராய் இணைந்துளோம்; எனவே,

155ஒருவரை யொருவர் உளமுறப் பொறுப்பம்;
நின்னைத் தொடற்கு நீண்டநாள் இல்லை;
இன்னே மணத்திற் கேற்றது தொடங்குவம்
என்றம் பிகாபதி இனிதே தேற்ற,

(அமராவதி)


நன்றி வணக்கம் நான்போய் வருகிறேன்

160நின்றினி யிருப்பின் நேடுவர் என்ன;
அடுத்த முழுநிலா நாளிவண் அடைவம்
எடுத்துப் பேசுவம் மற்றவை யெல்லாம்
என்றம ராவதி ஏற்ப மொழிந்து,

(மனத்திற்குள்)


நன்று நடந்து கொண்டார் நானவர்

165பண்பைப் பெரிதும் பாராட்டு கின்றேன்.
கண்டதும் காதல் கொண்டதும் பிரிவென,
ஆடு மாடுகள் அரிப்பு தீர்ந்ததும்
ஓடி விடுதல் ஒப்ப, மாந்தருள்
எவள்கிடைத் தாலும் இன்பந் துய்த்தபின்

170அவள்தனி வருந்த அகன்று மறைந்திடும்
கயவர் போன்றவரல்லரென் காதலர்
நயமுறு ஒழுக்கம் நண்ணிய என்றன்
காதலர் தொடாதென் கற்பினைக் காத்தார்
ஓதலிற் சிறந்தது ஒழுக்க மன்றோ?


157. மணத்திற்கு - திருமணத்திற்கு. 160. நேடுவர் - தேடுவர். 167. அரிப்பு. - புணர்ச்சி வேட்கை, அரித்தல். 168. கொண்டதும் - புணர்ச்சி கொண்டபின். 171. கயவர் - கீழ்மக்கள்.