பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ.13

105

இவர்களுள் முதலாவதாகக் குறிப்பிட்ட லவர் என்பாருக்கு எட்டு ஆண்டுகளில் இது நாலாவது விண் வெளிப் பயணமாகும்; அம்புலிக்குச் செல்வது இவருக்கு இசண்டாவது பயணமாகும். இவரைப்போல் எவரும் அதிகமான தடவைகள் விண்வெளிக்குச் சென்றதும் இல்லை ; அங்கு அதிககாலம் தங்கியதும் இல்லை. அப்போலோ 8 இல் இவர் கட்டளைப் பகுதியினை இயக்கியவர், ஜெமினி-7 இல் இவர் விண்வெளியில் அதிககாலம் தங்கியவர். இவரும் ஃபிராங்க் போர்மனும் பதினான்கு நாட்கள் தொடர்ந்து பூமியை வட்டமிட்டவர்கள். ஜெமினி வரிசையில் இறுதிப் பயணமாகிய ஜெமினி-12 இல் தலைவராகப் பணியாற்றியவரும் இவரே.

மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு அப்போலோ-13 விண்கலம் பூமியிலிருந்து 2,88,800 கி.மீ. தொலைவில் பறந்து சென்று கொண்டிருந்தபொழுது (அஃதாவது பூமியின் ஈர்ப்பு எல்லையையும் கடந்து அம்புலியின் ஈர்ப்பு எல்லையில் சென்று கொண்டிருந்த பொழுது) விண்கலத்தின் முக்கியப் பகுதியில் உயிரிய (Oxygen) ஒழுக்கு ஏற்பட்டதைக் கண்டனர் விண்வெளி வீரர்கள். இதனால் மின்சாரக் கெடுதல் ஏற்பட்டது.

கோளாறுக்குக் காரணம் இதுதான் : இராக்கெட்டில் உருளைவடிவம் போன்ற கட்டளைப்பகுதியில் மூன்று மின்சார அமைப்புகள் பொருத்தப்பெற்றிருந்தன. இவையே விண்கலத்திற்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்வன, உயிரியத்திற்கும் நீரியத்திற்கும் (Hydrogen) இடையே நேரிடும் வேதியியல் வினைகளால் இவ் வுற்பத்தி நடைபெறுகின்றது. அதே சமயத்தில் விண்வெளி வீரர்களுக்குச் சேமிப்பாகக் குடிநீரும் உற்பத்தி ஆகின்றது. இச் செயலில் ஏராளமான வெப்பமும் வெளிப்படுகின்றது. வெப்பத்தின் ஒரு பகுதி மின்சார அமைப்புகளினுள்ளே அனுப்பப் பெறுகின்றது; எஞ்சிய அதிகமான வெப்பம் அகண்ட விண் வெளியில் கரைந்து கலக்கின்றது. இங்ஙனம் பணியாற்றும் மின்கல அமைப்புகளில் இரண்டு செயற்படாமல் நின்று போயின.