பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அம்புலிப் பயணம்

காற்று மண்டலம் இல்லாவிட்டால் தாவரங்களோ, அல்லது பிராணிகளோ பூமியில் உயிர்வாழ முடியாது. உயிர் வாழ்க்கைக்குத் தனிப்பட்ட உயிரியம் வேண்டும். அங்ஙனமே, தாவர வாழ்க்கைக்குக் கரியமில வாயு மிகவும் இன்றியமையாதது. காற்று மண்டலம் இல்லை என்றால் இந்த இரண்டு வாயுக்களும் இருக்க முடியாது. காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் விண்வெளியில் (Space) தப்பி ஓடிவிட்டால் பூமியில் உயிர்வாழ் பிராணிகளும் தாவரங்களும் அற்றுப் போகும். இதைக் கேட்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அந்த வாயுக்கள் அங்ஙனம் தப்பி ஓடமுடியாது. ஏனென்றால், பூமி தன் ஈர்ப்பு ஆற்றலால் அவற்றைப் பலவந்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டுள்ளது.

காற்று மண்டலம் ஒரு போர்வை போல் பூமியைச் சூழ்ந்து கொண்டு நமக்குப் பல நன்மைகளைப் புரிந்து வருகின்றது. முதலாவது : சூரியனிடமிருந்து வரும் புற ஊதாகக் கதிர்கள் (Ultra - violet rays) பூமியில் அதிக அளவில் படியாதவாறு பாதுகாக்கின்றது. இரண்டாவது : வானவெளியி விருந்து வரும் விண்கற்களில் (Metaorites) பெரும்பாலானவை பூமியில் விழாதவாறு தடுக்கின்றது. மூன்றாவது : அண்டக் கதிர்கள் (Cosnic rays ) பூமியில் அதிகம் தாக்காதவாறு தடுத்து நிற்கின்றது. நான்காவது : பூமியினின்று சூரிய வெப்பத்தால் மேலேலும் நீராவியைத் திரும்பவும் மழையாகப் பொழியச் செய்து நீராகத் தருகின்றது. ஐந்தாவது : காற்று மண்டலம் இல்லாவிடில் பகல் நேரத்தில் தாங்க முடியாத சூரிய வெப்பம் பூமியைப் பொசுக்கும்; இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிரால் நீர் நிலைகள் உறைந்து போகும். ஆனால், காற்று சதா இடம் விட்டு இடம் மாறி வீசிக் கொண்டு இருப்பதால் தட்ப - வெப்ப நிலையை ஒருவாறு சமப்படுத்து தின்றது. ஆறாவது : காற்றிற்கு வெப்பத்தைக் கடத்தும். ஆற்றல் மிகக் குறைவாதலால் இரவு நேரத்தில் பூமி தன் வெப்பத்தை விரைவில் இழப்பதில்லை. இதனால் அது பூமியின் மேற்பரப்பை வெது வெதுப்பாக வைத்துக்கொள்வதற்கேற்ற ஒருகனத்த கம்பளம்போலச் செயற்படுகின்றது.