பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அம்புலிப் பயணம்

மாகவும் மற்றும் பல கருவிகள் மூலமாகவும் விண்வெளி - வீரர்களுடன் தொடர்பு கொண்டு விண்கலத்தின் பல்வேறு விசைகள் இயங்குவதை அடிக்கடி சரி பார்த்துக்கொண்டிருந்தனர். பெரிஸ்கோப் {Periscope) என்ற கருவியைப் பயன்படுத்தியும் தொலைக்காட்சித் திரைகளிலும் இராக்கெட்டு செல்லும் வழியைக் கண்டு தெளிந்தனர்.

அப்போலோ.11 பயணம் தொடங்குவதைச் செய்தித் தாள் பொறுப்பாளர்கள் முதலானோர் இராக்கெட்டு தளத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்துதான் கண்டுகளிக்க அனுமதிக்கப் பெற்றனர். மிகப் பெரிய சாட்டர்ன் - 5 இராக்கெட்டு பேரிரைச்சலுடன் நெருப்பைக் கக்கிக்கொண்டு கிளம்பும்போது அருகிலிருப்போரின் காதுகட்கும் கண்கட்கும் தீங்கு நேரும் என்ற காரணத்தாலேயே இத்தகைய ஏற்பாடு . மேற்கொள்ளப் பெற்றிருந்தது.

இராக்கெட்டுடன் சென்று விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் விண்கலத்திலுள்ள விண்வெளி வீரர்களுடன் தொடர்பு கொள்வதற்கென்று உலகின் பல பகுதிகளில் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன. இவற்றில் ஐந்து நிலையங்கள் அமெரிக்காவிலும், பத்து நிலையங்கள் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் முதலிய நாடுகளிலும் உள்ளன. இவற்றைத் தவிர நான்கு கப்பல்களிலும் எட்டு விமானங்களிலும் கண்காணிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. விண்வெளி வீரர்கள் இவற்றுள் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு வைத்துக்கொண்டே இருப்பர். ஒவ்வொரு விநாடியும் அவர்களின் உடல் நிலை, கலத்தின் வேகம், அஃது இருக்கும் இடம், அதற்குள் உள்ள வெப்பநிலை முதலிய பல எடுகோள் விவரங்களையும் இந்த நிலையங்கள் கண்காணித்துவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போலோ-11 விண்வெளிக் கலத்தை உச்சியில் தாங்கிக்கொண்டு விண்ணில் கிளம்பிய 3,817 டன் எடையுள்ள சாட்டர்ன்-5 இராக்கெட்டு விநாடிக்கு 15 டன் எரிபொருளை ஏப்பமிட்ட வண்ணம் எரிமலை கக்குவது போன்ற சுவாலையைப் பீறிட்டுக்கொண்டு மெதுவாக விண்ணை நோக்கிச் சென்றது;