பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இவ்வகை சுகத்தைக் கொடுத்தாளும் நீதியும் நெறியும் அமைந்த இராஜாங்கத்தை சுயராட்சியம் என்னும் பொருளறியாதோர் எல்லாம் விரோதிப்பாராயின் அஃது குடிகள் அறிந்து செய்யும் செயலா அன்றேல் குடிகளறியாமலே சுதேச சீர்கேடரின் வாக்கை நம்பிக்கெடும் வழுவுச் செயலா என்பதை நாம் சீர்தூக்கி சிந்தித்து ஆயிரம் குடிகள் கெட்டு அல்லல்படுவதைப் பார்க்கினும் துற்கன்மியாம் ஒரு குடியை அகற்றி ஊரார் யாவரையும் சுகம் பெறச் செய்வது இராஜ தன்மங்களில் ஒன்று என்று உணர்ந்து,

- 2:7; சூலை 29, 1908 -

இதே ராஜரீகத்தோரால் நாம் சீர்பெறுவோமா அன்றேல் அன்னிய ராஜாங்கத்தாரால் சீர்பெறுவோமா என்பதை சீர்தூக்கி உலகில் தோன்றியுள்ள ஒவ்வோர் இராஜநீதிகளையும் ஆராய்ந்துணரல் வேண்டும். அவ்வகையுணர்வோமாயின் இந்த பிரிட்டிஷ் இராஜநீதியே மேலானதென்று உணர்ந்து ஆனந்திக்கவரும்.

அதாவது தற்காலம் பம்பாய் இராஜதானியில் சிலர் காயமடைந்து வயித்தியசாலையில் இருப்பதும், சிலர் மரணமடைந்ததுமாகியக் காரணம் அவர்களால் நேர்ந்ததா அன்றேல் கனம் தில்லாக்கவர்களால் நேர்ந்ததா, இராஜாங்கத்தோரால் நேர்ந்ததா என்பதை சீர்தூக்கி ஆலோசிப்போமாக.

தூத்துக்குடியிலுந் திருநெல்வேலியிலும் கனஞ் சிதம்பரம்பிள்ளை அவர்கள் செய்துவந்த ராஜத்துவேஷ பிரசங்கத்தைக் கேட்டிருந்த குடிகள் யாவரும் இராஜத்துவேஷத்தை மனதில் வைத்துக்கொண்டிருந்து பிள்ளை அவர்களை ஓராண்டில் பிடித்து அடைத்தவுடன் அவரால் இராஜ துவேஷ பிரசங்கம் கேட்டிருந்த குடிகள் யாவரும் திரண்டுபோய் இராஜாங்கப்பொதுக் கட்டிடங்களையுந் தஸ்தாவேஜுகளையும் கொளத்தியும் இடித்து பாழ்படுத்தியதால் சிலர் காயமுற்றுஞ் சிலர் மரணமடைந்தும் சிலர் இராஜாதிகார விசாரிணையிலும் இருக்கின்றார்கள். குடிகளின் இத்தியாதி சுகக்கேடுகளுக்கும் காரணபூதமானோர் கனஞ் சிதம்பரம் பிள்ளையும் கனஞ் சிவா அவர்களும் என்றே தீர்ந்தது.

அதன் ஆதரவைக்கொண்டே பம்பாய் ராஜதானியிலுள்ளக் குடிகளின் கஷ்டங்களை ஆலோசிக்குங்கால் தில்லாக்கென்னும் கனவான் தனது பத்திரிகையிலும் போதனையிலும் கூறி வந்த ராஜதுவேஷ மொழிகளையும் கனவீன வாக்கியங்களையும் நாளுக்குநாள் வாசித்துங்கேட்டுவந்த குடிகள் கனந் தில்லாக்கவர்களை தெண்டித்து கப்பலேற்றிவிட்டார்கள் என்றவுடன் அக்குடிகளுக்கு இராஜாங்கத்தின் மீது இருந்த அவமதிப்பாலும் துவேஷத்தாலும் சுட்டுக்குருவி கருடன் மீது போர் தொடுப்பதுபோல் வீண் கலகத்தை விளைவித்து காயங்களால் துன்பமடைவதற்கும் மரணத்திற்கும் ஆளாகிவிட்டார்கள்.

குடிகளின் இத்தியாதி சுகக்கேட்டிற்குக் காரணந் தில்லாக்கென்னும் கனவானென்றே கூறுவர்.

கனந் தில்லாக்கென்பவர் ஒன்றுஞ் செய்யவில்லையே, இராஜாங்கத்தோர் தான் பட்டாளத்தைக் கொண்டுவந்து சுட்டெறித்தாரென்று சொல்லுவார்கள். அக்கூறுபாடுகள் அறியாமெயேயாகும்.

எவ்வகையில் என்பீரேல் குடிகள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு யாரிடத்து இராஜரீகஞ் செலுத்துவார்கள். பிரிட்டிஷ் ராஜரீகம் எக்காலுஞ் செங்கோலை உடைத்தாயதேயன்றி கொடுங்கோலை உடைத்ததன்று. இஃது பொது நீதிவாய்த்த சகலரிடத்துஞ் சத்தியமாக விளங்கும்.

பிரகலாதனென்னும் பிள்ளையைத் தன்வசப்படுத்திக் கொண்டு நாராயணா நமாவென்று சொல்லுந் தகப்பனாகிய இரணியனை வஞ்சித்துக் கொல்லு என்னும் கொடுங்கோல் செலுத்தமாட்டார்கள்.

கண்காணாக் கடவுளை நம்பிக்கொண்டு கண்கண்ட தகப்பனைக் கொல்லும்படியானவர்கள் இராஜாங்க உத்தியோகத்தில் இல்லாதவர்கள்