பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 103


அப்பகையையும் உடனே தேடுவார்கள் அப்படி வராமல் கவர்ன்மெண்டார் எங்களை சீர்தூக்குவார்களென்று கோருகிறோம்.

எங்களை வாதை செய்வதின் காரணம் நாங்கள் நாளுக்குநாள் சொந்தபூமியும் பயிரிடுஞ் சமுசாரிகளாகிவிடுகிறோம் என்றுதான். அன்றியும் சர்க்கார் தீர்வை கட்டப்போனால் அக்கிராரத்தை சுற்றிச்சுற்றி வரவேண்டியதாயிருக்கிறது. அப்படி அவதிப்பட்டு பணம் வைத்துக்கொண்டு முன்சீப் ஐயரைக்கண்டால் அவர் வாங்கிக் கொள்ளாமல் கெளண்டனென்னுஞ் சாதியான் மூலமாய் பெற்றுக் கொள்ளுவது வழக்கம். இதுவும் தவிர போஸ்ட் பெட்டியை அக்கிராரத்துக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் எங்கள் அவசரக் கடிதங்கள் தாமதப்பட்டுப்போகிறது. இப்படி பிராமணாளிடத்தில் பலவித ஹிம்சைகளை அனுபவித்துவரும் எங்களை கருணைதங்கிய பிரிட்டீஷ் கவர்ன்மெண்டார் முன்னுக்குக் கொண்டுவரும்படியாயும், கனந்தங்கிய (தமிழன்) பத்திராதிபர் எங்கள் இடுக்கங்களை கவனித்து காருண்ணிய கவர்மெண்டாருக்கு தெரியப்படுத்தவும் இதனடியில் கையொப்பமிட்ட யாங்கள் தெரிவித்துக் கொண்டோம்.

எங்களுக்குள் வரதனென்பவன் இந்த எடஞ்சல்களைப் போய் கேட்டதின்பேரில் நாலுபாப்பார்கள் அவனைக் கல்லுகளாலும், தடிகளாலும் அடித்து உதிரமே வரச்செய்துவிட்டார்கள். அவன் அதிகாரிகளிடம் பிரையாது செய்யப்போனப்பின் ஒரு வாழைக் குலையை வெட்டி வந்து முன்சீப் வீட்டுத் திண்ணையின்பேரில் வைத்து இந்த வாழைக்குலையைத் திருடினான் அடித்தோமென்று பொய்யைச்சொல்லுகிறார்கள்.

இப்படியாக எங்களுக்கு நேரிட்டுள்ள கஷ்டங்களை இங்கிலீஷ் ராஜாங்கத்தோருக்குத் தெரிவிப்பதுடன் மாஜிஸ்டிரேட்டவர்களும் சரியாக விசாரித்து ஏழைகளைக் காப்பாற்றும்படிக் கோருகிறோம்.

ஓரத்தூர் சேரிவாசிகள்,
- 2:33, சனவரி 27, 1909 -


42. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் அபிப்பிராயமும் அவரது முடிவும்

கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் ஏற்படுத்தியுள்ள தற்கால ஏற்பாட்டினால் இந்தியர்களுக்கும், மகமதியர்களுக்கும் சிலமனத்தாபங்கள் உண்டாகும்போல் காண்கின்றதென்று சில பத்தராதிபர்கள் கூறுவது வீண் பிரளியேயாம்.

அதாவது இந்தியர்கள் என்றும், மகமதியர்கள் என்றும் பிரிவினையாகக் கூறுவதால் பேதமுண்டாயதேயன்றி அவர்களையும் இந்தியர்கள் என்றே கூறுவோமாயின் பேதந் தோன்றாவாம்.

எவ்வகையிலென்பீரேல், மகமதியர் வருகைக்கு சில காலங்களுக்கு முன்பு இத்தேசத்தில் வந்து குடியேறியவர்கள் பிராமணர் பிராமணரென்று சொல்லிக்கொண்டு வந்து இப்போது நாங்களும் இந்தியர்கள் என்று சொல்லிக் கொண்டு சகல சுதந்திரங்களும் வேண்டும் என்று கேட்கும்போது இத்தேசத்தையே சிற்சில இடங்களில் அரசாண்டுவந்த மகமதியர்களையும் ஏன் இந்தியர்கள் என்று சொல்லப்படாது.

அவர்களும் ஓர்வகையாய் இந்தியர்களேயாவர். மகமதியர்களை இந்தியர்கள் என்று கூறலாகாதென வெளிவருவார்களாயின் வைணவர், சைவர், வேதாந்திகளென்னும் மூவருக்கும் இந்தியர்கள் என்னும் பெயர் பொருந்தாது.

பெளத்தமார்க்கத்தார் ஒருவருக்கே இந்தியரென்னும் பெயர் பொருந்தும்.

அதாவது, புத்தபிரான் ஐயிந்திரியங்களை வென்று இந்திரரென்னும் பெயர்பெற்று தேசமெங்கும் இந்திரவியாரங்களைக் கட்டி இந்திரவிழாக்கோல், இந்திரவிழாவணி, இந்திரபூஜையென்றும் எங்கும் கொண்டாடி அவரது தன்மத்தை இந்தியதன்மமென்றும் அந்த தன்மத்தைக் கொண்டாடிவந்த மக்களை இந்தியர்கள் என்றும், அவர்கள் வாசஞ்செய்திருந்த தேசத்தை இந்தியர் தேசமென்றும் வழங்கிவந்தவற்றுள் வடயிந்தியர் வாசஞ்செய்த