பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அத்தகைய உத்தேசம் அவர் இந்தியாவை வந்து பாராத திறையும், இந்துக்களுடன் பழகாத குறையுமேயாம்.

கண்டும் பழகியும் இருப்பாராயின் அப்பா! அப்பா!! இந்துக்களுக்கும் அந்தஸ்தான உத்தியோகங்களுங் கொடுக்கப் போமோவென்று குப்புறப்படுத்துக்கொள்ளுவார். காணாதவரும், பழகாதவரும் ஆதலின் அவர் கருத்துகள் யாவும் விருத்தமாக விளங்குகின்றது.

ஒரு ஆபீசில் பெரியஉத்தியோகஸ்தர் ஒரு ஐயங்கார் சேர்வாராயின் ஐந்து வருஷத்துக்குள் அவ்வாபீசிலுள்ள முதலி, செட்டி, நாயுடு, மற்றுமுள்ளவர்கள் எல்லாம் மறைந்து போய் எல்லாம் ஐயங்காரர்கள் மயமாகவே தோன்றுவதியல்பாம்.

இத்தகையான மாறுதல்களை அறிந்த ஐரோப்பியர்களும் இருக்கின்றார்கள். ஏழைக்குடிகள் வாழும் கிராமங்களை எட்டிப்பார்க்காத ஐரோப்பியர்களும், சாதிவேஷத்தின் இடுக்கத்தால் நசுங்குவோர்களைக் காணாத ஐரோப்பியர்களும் அனந்தம்பேர் இருக்கின்றார்கள்.

இந்துதேசத்தைக் கண்ணுற்றும், பழகியுமுள்ள ஐரோப்பியர்களுக்கே இத்தேசத்தின் சாதிகளின் முடுக்குகளும் அத்தகையக் கொடுஞ்செயலால் ஏழைக்குடிகள் படும் இடுக்கங்களும் இன்னும் விளங்காமலிருக்கின்றது.

அங்ஙனமிருக்க நமது கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியாவுக்கு வந்து தேசநிலைகளையும், கிராமநிலைகளையும் கண்டவருமன்று, பெரியசாதி சின்னசாதி என்னுங் குடிகளுடன் பழகியவருமன்று.

தான் வாசஞ்செய்யும் ஐரோப்பியக் குடிகள் ஏழைகளாயினும், கனவான்களாயினும், கற்றவர்களாயினும் கல்லாதவர்களாயினும் களங்கமற்ற வாழ்க்கையிலிருப்பதுமன்றி கனவான்கள் யாவரும் ஏழைகளை ஈடேற்ற வேண்டும் என்னும் முயற்சியிலிருக்கின்றார்கள்.

அதுபோல் இந்துக்களுக்குள் அன்பும், ஒற்றுமையுமுண்டோ? கனவான்களாயுள்ளவர்கள் ஏழைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்வதுண்டோ? யாதுங் கிடையாது செயல்களுங் குணங்களும் இவற்றிற்கு மாறாகவே விளங்கும்.

இத்தியாதி வித்தியாசங்களையும் இந்துக்களின் குணாகுணங்களையும் நன்காராய்ந்து அறியாத லார்ட் மார்லியவர்கள் இந்துக்களுக்கு பெருத்த உத்தியோகங்களை அளிக்கலாமென்றாலோசிப்பது உள்ள ஏழைக்குடிகள் ஒருவரையுந் தலையெடுக்கவிடாமல் நசித்துவிட்டு சாதித்தலைவர்களை மட்டிலும் சுகமடையச் செய்வதற்கேயாகும். ஆதலின் நமது பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோசினையதிபர்கள் இந்தியகுடிகளை இடுக்கத்திற்கு ஆளாக்காமல் காக்க வேண்டிய தேவர்கள் கடனாகும்.

- 3:3; சூன் 30, 1909 -


59. நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கம் வேண்டும்

அதாவது, காயப்பட்டுள்ள மாடுகளையும் குதிரைகளையும் காப்பாற்றும்படியான ஓர்கூட்டம் இயற்றி வண்டிக்காரர்களால் ஏழை ஜெந்துக்களின் இடுக்கங்களையும், உபத்திரவங்களையும் நீக்கும்படியான கண்ணோக்கம் வைத்துக் காப்பாற்றி வருகின்றார்கள்.

வண்டிக்காரர்களோ தங்கள் வண்டிகளில் ஏற்றியுள்ள மநுக்களுக்கு ஓரிடையூறு செய்யாமலும், அவர்களின் பொருட்களை அபகரித்து ஒளியமுடியாமலும் இருக்கக்கூடிய பித்தளை பில்லைகளை வண்டிக்காரர்கள் கைகளில் கட்டி கண்ணோக்கம் வைத்து ஏழைமநுக்களைக் காப்பாற்றி வருகின்றார்கள். அதுபோல் இந்த ரெயில்வேவிஷயங்களிலும் தக்க ஏற்பாடுகளைச் செய்து அவைகண்மீதுங் கண்ணோக்கம் வைத்துக் காப்பாற்றக் கோறுகிறோம்.