பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 / அயோத்திதாசர் சிந்தனைகள்

செய்துவந்த நன்றிக்கு அவர்களை தூஷிப்பதும் புறங்கூறுவதுமாகியச் செயல்களே நன்றியறிதலாகும்.

ஒருவர் செய்துள்ள தீங்கை மறப்பது நன்று, செய்நன்றியை மறப்பது நன்றாமோ. அத்தகைய நன்றிமறப்போர் ஏழைகளை ஈடேற்றுவார்களென்பது இனிய மொழியாமோ, சீர்திருத்துகிறவர்களையும் கெடுத்து தாங்களும் சீர்திருத்தாது விடுவதே கண்ட பலனாகும். ஆதலின் ஆடு கசாயிக்காரனை நம்பி அடியோ டழிவதுபோ லழியாமலும் தாழ்ந்த சாதியோரை உயர்த்துகிறோமென்னும் கூட்டத்தை நாடாமலும் தங்களைப்போல் பிறரை நேசிக்கும் அன்புபொருந்தி தங்களை மனிதர்களென்றெண்ணி மனிதர்களை சீர்திருத்துங்கூட்டத்தோரை நாடுங்கள், நாடுங்கள்.

- 3:52; சூன் 8, 1910 -


140. காணாதக் கடவுளின்மீது விசுவாசம் வைக்கவேண்டுமென்னும் பொய்யைச் சொல்லி பொருள் பரிப்பதினும் காணும் அரசரை விசுவாசிப்பது அழகேயாம்

உலகத்தில் யாருங்காணா கடவுள் ஒருவர் இருக்கின்றார். அவர் எங்கும் வியாபியென்பார் சிலர். வேறு சிலர் கடவுள் ஒருவர் இருக்கின்றார் அவர் ஓரிடத்தில் இருக்கின்றார். அவரைக் காணவில்லையென்பர். இவ் விருதிரத்தோர் கூற்றும் வெறும் உத்தேசமேயாம்.

காரணமோவென்னில், எங்கும் வியாபியாயுள்ளக் கடவுளை எங்கிருந்து தியானிக்கின்றான். தியானிப்பவனிடம் கடவுள் வியாபகம் இல்லையா என்னும் விசாரிணையற்ற மொழியேயாம். கடவுளே ஓரிடத்திலிருந்து சருவ காரியாதிகளையும் நடாத்துகின்றாரென்னில் தீச்செயலுக்கும் நற்செயலுக்குக் காரணம் அவரேயாவர். அதுகொண்டு கடவுளென்னும் பெயர் அவருக்குப் பொருந்தாவாம். ஆதலின் கடவுளென்னும் மொழியையும் அதன் செயலையுங் கண்டு விசுவாசியாது, காணாது விசுவாசிக்கின்றோம் என்னும் பொய்யைச் சொல்லி பொருள் பரிக்காது இராஜவிசுவாசத்தில் நிலைத்து உழைத்துப் பொருள் சம்பாதிப்பதே உத்தமமாகும்.

கடவுளை விசுவாசிக்கின்றோம் என்னும் பொய்ம்மொழியே இராஜ விசுவாசத்தைக் கெடுத்து சீரழித்து வருகின்றது. எவ்வகையிலென்னில், அரசனேற்பட்டு குடிகளுக்கு ஜலசெளக்கியத்தை உண்டுசெய்ய வேண்டுமென்னுங் கருணை பால் வேணமுயற்சி கொண்டு பூமியை சரி திருத்தியும், குழாய்க்களைப் புதைத்தும் இயந்திரங்களை அமைத்தும், தூரத்திலுள்ள நீரைக் கொணர்ந்து குடிகளுக்களித்து சுகம்பெறச் செய்வாராயின் இத்தகையப் பெருமுயற்சியுற்ற அரசனின் செயலை மறந்து ஓர் கடவுட்செயலால் ஊருக்குள் குழாய் மூலம் வந்து சுகம்பெற்றிருக்கின்றோம் என்பார்கள். அதே குழாய்கள் உடைந்து நீரும்வராது குடிகளுக்கு ஜல வசதி கெட்டுப் போமாயின் அக்காலத்தில் கடவுட் செயலை மறந்து அரசாங்கத்தோர் குழாய் ஜலத்தைக் கவனியாத படியால் குடிகள் மெத்தக் கஷ்டத்தை அநுபவிக்கின்றோம் என்பார்.

இருவகைச் செயலால் சுகம் வருங்கால் கடவுட் செயலென்பதும், துக்கம் வருங்கால் அரசாங்கச் செயலென்பதுமாகிய இருவகைக் கற்றால் நமக்கு கடவுள் விசுவாசத்திலும் நிலையில்லை, இராஜவிசுவாசத்திலும் நிலையில்லை என்பது ஸ்பஷ்டமேயாம்.

காணாத கடவுளை விசுவாசிக்கின்றோம் என்னும் அன்பு யாதார்த்தமாயின் காணுங் கடவுளாம் அரசரை விசுவாசிப்பதே பெரும்பேரும் சுகமுமாகும். நம்மெய்க் கார்த்து ரட்சித்து சுகசீரளித்துவரும் அரசரை விசுவாசிக்காது கடவுளை விசுவாசிப் போமென்பதாயின் செய்நன்றி மறந்தவர் கூட்டத்திற் சேர்வதாகும். ஆதலின் காணாக் கடவுளை விசுவாசிப்பதினுங் காணும் அரசரை விசுவாசிப்பதே மேலாயதாகும்.

- 4:2; சூன் 22, 1910 -