பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எண்ணிக் கொண்டு சீவகாருண்யமற்று ஜலமீய்ந்து தாகத்தைத் தணிக்க இதக்கமில்லாதவர்கள் வானத்தை நோக்கி மழைப் பெய்யவில்லை என்றால் பெய்யுமோ, பயிறு விளையவில்லையென்றால் விளையுமோ ஒருக்காலுமாகா. இந்துக்களென்பவர் குளங்களில் மாடுகள் வாய்வைத்து தண்ணீர் குடிக்கலாம், குதிரைகள் வாய்வைத்து தண்ணீர் குடிக்கலாம், கழுதைகள் வாய்வைத்து தண்ணீர் குடிக்கலாம், ஏழைகளாகிய மனிதசீவர்கள் தங்கள் பாத்திரங் கொண்டேனும் தண்ணீர் மொள்ளப்படாதென்னும் கொடூர சிந்தையை உடையவர்கள் நாளுக்கு நாள் இத்தேசத்தில் பெருகிவருகின்றபடியால் வானஞ்சுருங்கி பஞ்சமுண்டாகி பெருவாரிக் காச்சலும் பிளேக்கென்னும் நோயும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. “ஏழைக ளழுதக்கண்ணீர் கூரிய வாளுக்கொக்கு” மென்னும் பழமொழிக்கிணங்க தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்படுவதற்கும் உயர்த்தப்படுகிறவர்கள் தாழ்த்தப்படுவதற்கும் காலம் வந்துவிடும். அப்போது நாங்கள் உயர்ந்தோர்கள் உயர்ந்தோர்களென்று கூச்சலிடுவதாயின் ஒருவரும் அவ்வாக்கியத்தை ஏற்காமற்போவர். அவ்வகை ஏற்காது அவமதிப்படைவதற்கு முன் தங்களுக்குள்ள தாகம் ஏழைகளுக்கும் இருக்குமென்றும், தங்களுக்குள்ள பசி ஏழைகளுக்கும் இருக்குமென்றுந் தங்களுக்கு வேண்டிய சுகம் ஏழைகளுக்கும் வேண்டியதென்றும் சீவகாருண்ணியம் வைத்து தாகத்தைத் தணியுங்கள், பசியைப் போக்குங்கள், சுகத்தைக் கொடுங்கள் “அதிக முறுக்குவதால் அறுந்துபோமென்னும்” அநுபவமுண்டு. ஆதலின் சுகச்சீர்பெறக் கருதுவோர் சகலரையுஞ் சுகச்சீர்பெறக் கருதுங்கள்.

- 4:6: சூலை 20, 1910 -


144. தற்கால இந்தியர் சீர்பெறாக்காரணம் சிலர் தங்களை உயர்ந்த சாதியோரென்று உயர்த்திக்கொள்ளுவதும் சிலர் தங்களைத் தாழ்ந்தசாதியோரென்று தாழ்த்திக்கொள்ளுவதுமேயாம்

இந்திரதேசமானது புத்த்தன்மத்தை அநுசரித்து பொய்ப்பேசாமலும், கொலைசெய்யாமலும் களவுசெய்யாமலும், பிறர் தாரத்தை இச்சியாமலும், மதுபானம் அருந்தாமலும் சுத்த தேகவாழ்க்கையிற் பொருந்தி ஒற்றுமெயிற் சிறந்து ஒருவருக்கொருவர் அன்பும் ஆறுதலும் பெற்று வாழ்ந்துவந்த காலத்தில் புருடர்கள் யாவரும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தில் நிறைந்தும் இஸ்திரீகள் யாவரும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பென்னும் நான்கிலும் சிறந்து சகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

அத்தகைய வாழ்க்கை காலத்தில் அவன்சிறிய சாதி, இவன் பெரியசாதி என்னும் சாதிகர்வங்களில்லாமலும் அவன்சுவாமிபெரியசாமி, இவன் சாமி சிறியசாமி என்னும் மதகர்வங்களில்லாமலும், அவன் வித்தையிற் பெரியோன், இவன் வித்தையிற் சிறியோனென்னும் வித்தியா கர்வங்களில்லாமலும், அவன் கனவான் இவன் ஏழையென்னும் தனகர்வங்களில்லாமலும், தங்கடங்கள் செயல்கள் யாவும் வித்தியா விருத்தியிலும், பூமியின் விருத்தியிலும், கல்வியின் விருத்தியிலும், ஞானவிருத்தியிலுமே கண்ணுக்கருத்துமாய் நின்று பாஷைபேதம் இருப்பினும் மநுகுல பேதங் கிஞ்சித்துமின்றி அன்பின் பெருக்கத்தால் ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி சகலருஞ் சுகச்சீர் பெற்று ஆனந்தவாழ்க்கையில் இருந்தார்கள். ஒற்றுமெயும், சுகச்சீரும், ஆனந்தமும் மிகுத்த வாழ்க்கையினால் இந்திரதேசமும் சிறப்புற்று உலகத்தில் தோன்றியுள்ள மநுகுலத்தோர் யாவரும் இந்திரதேசம் வந்து அரியவித்தைகளைக் கற்றுச் சென்றார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுவதற்குப் பூர்வ சரித்திரங்களே போதுஞ் சான்றாம். அத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நிறைந்து ஒற்றுமெயிலும், ஒழுக்கத்திலும் சிறப்புப் பெற்றிருந்த தேசமானது சிலவஞ்சநெஞ்சமுடையோர் குடியேற்றங் கொண்டு அவர்களதுசுயப் பிரயோசனங்களுக்காய் ஞானமார்க்க பிரமணவேஷம் இட்டுக்கொண்டு தங்கள் பொய்வேஷம் அறியாக் கல்வியற்றக் குடிகளையும் காமியமுற்ற