பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xl / அயோத்திதாசர் சிந்தனைகள்

கிடைத்த பொருட்களை சேர்த்தல், சிதறவிடாமல் காத்தல், காத்த பொருளை அறம், பொருள், இன்பத்திற்கு செலவு செய்தல், குடிகளை நேரில் பார்வையிடல், ஒரு குடியால் மற்றோர் குடிக்கு கெடுதி நேரிடாமல் காத்தல், குடிகளுக்கு நேரிடும் துன்பங்களை தனக்குற்ற துன்பம் போல் கருதி காத்தலுமாகிய செயல்களில் செங்கோலைச் செலுத்துவானாகின் அவனை காக்கும் இறையென்றும் கொண்டாடுவார்கள்” (தமிழன் -24.7.1907)

என்று தொல் தமிழர் நீதி நூல் கொள்கையை எடுத்துக் கூறுகிறார். இந்த நெறிப்படி, பழந்தமிழர்கள் ஆட்சி சங்க காலத்திற்கு முன்போ பின்போ நடைபெற்றதா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். ஆனால் முடி மன்னர் ஆளுமைக்குப் பிறகும் மகமதிய-ஆங்கிலேய ஆட்சிகளும் நீதி நூல்கள் கூறின அத்தகைய தரும நெறியால் ஆளப்படவில்லை என்பதை வரலாறு காட்டும். ஆங்கில ஆட்சி மாற்றப்பட்டு இந்தியா தன்னாட்சி அல்லது சுயாட்சி பெற்றாலும் நீதிநெறிப்படி ஆட்சி நடைபெறாது என்று ஐயப்பட்ட அயோத்திதாசர் வருணாசிர தர்மத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய மக்களில் எந்த சாதியாரிடம் ஆட்சி செல்லுமோ என்று கேட்கிறார்.

“சுயராட்சியமென முயற்சிக்கும் இந்துக்கள் தங்களது மநுதர்ம சாஸ்திரத்தை நீக்கிவிட சுயராட்சியம் விரும்புகிறார்களா அன்றேல் மனுதர்ம சாஸ்திரத்தை சட்டமாக வகுத்துக் கொண்டே ஆள விரும்புகிறார்களா விளங்கவில்லை. மனு தர்ம சாஸ்திரத்தை அனுசரித்துக் கொண்டே சுயராட்சியம் பெறுவதாயின் தேசாதிபதியாக கவர்னரும் படைத்தலைவராக கமாண்டர்சீப்பும் சத்திரியர்களாக இருந்து தீர வேண்டும்... எந்த க்ஷத்திரர்பால் ஈய்வரோ”... (தமிழன் -21.8.1912)

என்று கேட்கிற இவர் ஆங்கில ஆட்சிக்குப் பிறகும் வருணாசிரம் ஆட்சியே நடைபெறும் என்று நம்பியிருக்கிறார். கவர்னர், கமாண்டர் என்ற பதவிகள் ஆட்சி மாற்றமடைந்த பிறகும் சத்திரியர், பிராமணர் போன்ற வருணத்தாரின் ஆளுமைக்கு நாடு உட்படும் என்று கருதியே இவ்வாறு கூறுகிறார். அவ்வாறு மாறினால் ஆறுகோடி- தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை பாழ்பட்டுவிடும் என்றும் அஞ்சுகிறார்.

“நமது சக்கரவர்த்தியார் கருணை வைத்து அதிகாரங்களை (இந்தியர்களிடம்) முற்றும் கொடுத்துவிடுவார்களாயின் சாதிபேதத்தால் நசுங்குண்டுள்ள ஆறுகோடி மக்களும் அடியோடு நாசமடைந்துவிட வேண்டியதேயாம்... சாதி துவேஷம் இத்தேசத்தை விட்டு எப்போது தொலைக்க முயல்கிறார்களோ அப்போதுதான் இந்திய தேசத்தோருக்கு சுயராட்சியமும் மற்றுமுள்ள உத்தியோகங்களும், சகல சுதந்திரங்களும் கொடுக்க வேண்டுமேயன்றி சாதி துவேஷம் இந்தியாவில் இருக்குமளவும் சக்கரவர்த்தியாரும் கவர்னர் ஜெனரலும் காரியாதிகளை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்” (தமிழன் - 25.12.1912)

என்ற அயோத்திதாசரின் கருத்தில் நாடு சுதந்திரம் பெறும் என்ற நம்பிக்கை இருந்தது தெரிகிறது. ஆயினும் சாதிவெறி ஒழியாமலே இருக்கும் என்ற அச்சம் இருப்பதும் தெளிவாகவே தெரிகிறது. தேசம் இந்திய மயமாக்கப்பட்டாலும் அல்லது விடுதலை பெற்றாலும் நாட்டில் சாதி பாகுபாடு ஒழியும்வரை ஆங்கில ஆளுமையே இருக்கட்டும் என்ற ஆவலும் தெரிகிறது. அதே சமயத்தில் இந்திய மக்களில் நல்லவர் சிலர் உள்ளனர். அவர்களால் நாட்டை ஆளவும் முடியும் என்றாலும் சாதிவெறி நாட்டிற்குக் கேட்டை விளைவித்துவிடும் என்றும் கூறுகிறார்.

“இத்தேசத்துகுடிகள் இராஜாங்க உத்தியோகத்திற்கு பொருந்தியவர்கள் அல்ல என்பது எனது அபிப்பிராயமன்று. அவர்களுக்குள்ள சாதி சம்பந்தப் பிடிவாதமும் மதசம்பந்த வைராக்கியங்களுமே அவற்றிற்கு கேடாக முன் நிற்கிறது ... சாதி பேதமின்றியும் சமய பேதமின்றியும் மனிதர்களை மனிதர்களாக பாவித்து நீதி செலுத்தும் புண்ணிய புருஷர் நூற்றிற்கு ஒருவரோ இருவரோ இருப்பாரின்றி வேறில்லை” (தமிழன் -1.10.1913)