பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360 / அயோத்திதாசர் சிந்தனைகள்


215. 27 வருட காலம் நிறைவேறிவரும் இந்தியன் நாஷனல் காங்கிரசால் ஏழைகளுக்கு ஏதேனும் சுகமுண்டோ

ஏதொன்றுங் கிடையாவாம். அதாவது 1500-வருடகாலமாகத் தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களென மாற்றி மேற்சாதி கீழ்ச்சாதி பொய்க் கட்டுப்பாடுகளையுண்டுசெய்துக்கொண்டு மேற்சாதியென்போர் பணம் சம்பாதிக்கவேண்டிய விஷயத்திற்கு எவ்வேலையாயினும் செய்யலாம், எங்கு செல்லவேண்டுமாயினும் செல்லலாம், அக்காலத்தில் சாதிபேதமென்னும் சொற்கள் கிடையாது. அவர்களால் கீழ்ச்சாதியென்று வகுத்துள்ளவர்கள் பணம் சம்பாதிக்கவேண்டிய இடங்களிலும், ஒரு தேசத்தைவிட்டு மறு தேசங்களுக்குப் போகவேண்டிய இடங்களிலும் சாதிபேதம் உண்டென்னுங் கட்டுப்பாட்டை உறுதிபடுத்தி 60 லட்சத்திற்கு மேற்பட்டக்குடிகளை சீர்பெறவிடாது அவதிக்கும் அல்லலுக்கும் ஆளாக்கிப் பாழ்படுத்தி வருஞ் செயலை இக்காங்கிரஸ் கமிட்டியார் பாராத ரகசியமல்ல. சாதிபேதமென்னும் பொய்க்கட்டுப்பாடுகளினால் ஏழைக்குடிகள் சுத்தநீர்மொண்டு குடிக்கும் சுகமில்லாமலும், வண்ணானிடம் வஸ்திரம் வெளுக்க வழியில்லாமலும், நாவிதனிடம் சவரஞ்செய்யச்சொல்வதற்கு நாவெழாமலும் அகத்தத்தால் மடிந்தழியும் அவதிகளைக் கண்ணாறக்கண்டவர்களும், காதாரக் கேட்டவர்களும் இக்காங்கிரஸ் கூட்டத்தோர்களோடு வந்து சேர்ந்து கொண்டு, ஏழைகள் படும் கஷ்டங்களைக்கண்டுங்கருணைவையாது நாளதுவரையில் தங்களுக்கு வேண்டிய சுகங்களை மட்டிலும் வருடந்தோரும் வீண்வாதஞ் செய்துவருகின்றார்கள்.

இத்தேசத்திய ஏழைமக்களை சீர்திருத்தாது தங்கள் மட்டிலும் சுகத்தைத் தேடிக் கொள்ளுவோர்களுக்கு நாஷனல் காங்கிரசென்னும் பட்டப்பெயர் பொருந்துமோ. (நாஷனல்) என்னும் மொழிக்குத் தக்கவாறு சகலசாதியோருக்கும் பொதுவாய சீர்திருத்தம் யாது செய்துள்ளார்கள்.

பிரதமத்தில் இந்தியதேசக் காங்கிரஸ் கமிட்டிக்கு வழிக்காட்டியாக நின்ற மிஸ்டர் ஒடானல் என்பவர் இந்தியாவிலுள்ளப் பலசாதியோர்களையும், பலமதஸ்தர்களையும் ஒன்று கூட்டி பேதம் பாராட்டாமல் சீர்திருத்தி சுகம்பெறுங்கோளென்பது அவரது கருத்து. அவற்றிற்கு முற்றும் மாறாக சாதிபேதத்தை உண்டு செய்துகொண்டு அதனால் அதிகார சீவனஞ் செய்பவர்களும் சாதித்தலைவர்களுமே பெரும்பாலும் சேர்ந்து நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரெனக் கூறி சாதிபேதமில்லாப் பெருங்கூட்டத்தோரை அதனுட் சேர்க்காது தாங்கள் சுயகாரியாதிகளை நடத்திவருகிறார்கள்.

அதனால் இந்நாஷனல் காங்கிரஸ் கமிட்டியோரவர்களால் என்ன ஆசார சீர்திருத்தங்களைச் செய்து எந்த ஏழைகளை முன்னேறச் செய்தார்கள். எத்தகையக் கல்விசாலைகளை அமைத்து எவ்வேழைகளையதனுடன் சேர்த்து கல்வி விருத்தியும் கைத்தொழில் விருத்தியும் செய்துவைத்திருக்கிறார்கள். இந்திய ஜனங்களில் யாரை ஒருமுகப்படுத்தி யாரை சீர்படுத்தியுள்ளார்கள். ஏழைமக்களுக்கு யாது சுகமுங்கிடையாது. யதார்த்தத்தில் இவர்களால் சீர்பெறாவிடினும் தங்களுக்குத்தாங்களே சீர்பெற்றுவரும் சாதிபேதமற்ற திராவிடர்களே ஒன்றுகூடி எங்களுக்கென்றொருவரை லெஜிஸ்லேட்டிவ் கவுன்சலில் நியமிக்கவேண்டுமென்று கேட்டிருக்க அவற்றிற்கோர் உபபலனுங்கூறாது செவியிற் கேளாது போலிருப்பது நாஷனல் காங்கிரஸ் கமிட்டி என்னும் பெயருக்குப் பொருந்துமோ.

ஏழை மக்களுக்குக்காலியாயுள்ள பூமிகளைக் கொடுக்கவேண்டுமென்னுங் கவர்ன்மெண்டார் கண்டிப்பான உத்திரவைக்கொடுத்திருந்தும் திண்டிவனத்தாலுக்காவைச் சார்ந்த ஏழைக்குடிகள் யாவருங்கூடி தங்களுக்கு பூமிவேண்டு மெனக்காலிபூமிகளைக்காண்பித்தும் அவ்விடத்திய கிராமவாசிகளால் தடுக்கப்பட்டு அவர்களை முன்னேறவிடாது சீரழித்துவரும் சங்கதிகள் யாவும் இக்காங்கிரஸ் கமிட்டியார்களுக்குத் தெரியாததோ, யாதார்த்த நாஷனல்